Tatkal Ticket Rule Change: தட்கல் டிக்கெட் எடுக்கப் போறீங்களா?.. ஆகஸ்ட் 1 முதல் புது ரூல்ஸ்.. முழு விபரம் இதோ!
கவுண்டர் மூலம் தட்கல் டிக்கெட் பெறுவதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1 முதல் புது விதிகள் அமலுக்கு வரவுள்ளது

ரயில்களில் தட்கல் முறையின் முன்பதிவு செய்பவர்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் புதிய விதிகள் அமல்படுத்தப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
ரயில்களில் முன்பதிவு
இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து துறையான ரயில்வே பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தினமும் ஆயிரக்கணக்கான ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை நகரம், கிராமம் என அனைத்தையும் இணைக்கும் வகையில் கிடைக்கும் இந்த ரயில் சேவையை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே தொலைதூரம் செல்லும் ரயில்களில் இருக்கை, சாதாரண படுக்கை, ஏசி படுக்கை வசதி ஆகிய 3 பிரிவுகளுக்கு முன்பதிவு அடிப்படையிலும் டிக்கெட் புக் செய்யும் வசதி உள்ளது. சுமார் 60 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட் முன்பதிவு செய்துக் கொள்ள முடியும். இதற்காக ஐஆர்சிடிசி, ரயில் ஒன் ஆகிய செயலிகள் செயல்பட்டு வருகிறது.
தட்கல் டிக்கெட் முன்பதிவில் மாற்றம்
அதேசமயம் பயண நாளுக்கு ஒருநாள் முன்பு தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது. இது வழக்கமான கட்டணங்களில் இருந்து ரூ.100 முதல் ரூ.200 வரை கூடுதலாக இருக்கும். ப்ரீமியம் தட்கல் முறையில் பயணிகளின் தேவையைப் பொறுத்து நிமிடத்திற்கு நிமிடம் கட்டண உயர்வு இருக்கும். ஏசி பெட்டிகளுக்கு முதல்நாள் காலை 10 மணிக்கும், சாதாரண வகுப்புகளுக்கு 11 மணிக்கும் டிக்கெட் முன்பதிவு தொடங்கும். இந்த டிக்கெட்டுகளை இணையம் மூலமாகவும், நேரில் கவுண்டர்கள் வழியாகவும் பெறலாம்.
இந்த நிலையில் .கவுண்டர் மூலம் தட்கல் டிக்கெட் பெறுவதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1 முதல் புது விதிகள் அமலுக்கு வரவுள்ளது
அதன்படி, தட்கல் முன்பதிவுக்கு கவுண்டர்களில் மிகப்பெரிய அளவில் நெருக்கடி ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இடைத்தரகர்களின் தலையீடும் அதிகமாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனை சரி செய்ய டோக்கன் முறை அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் டோக்கன் தான் முக்கியம்
இனிமேல் முன்பதிவு தொடங்குவதற்கு முன்பே டோக்கன் வழங்கும் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏசி வகுப்பு முன்பதிவுகள் காலை 10 மணிக்குத் தொடங்கும். காலை 8:30 மணி முதல் 9 மணிக்குள் டோக்கன்கள் வழங்கப்படும். ஸ்லீப்பர் வகுப்பு முன்பதிவுகள் காலை 11 மணிக்குத் தொடங்கும் நிலையில் காலை 9:30 மணி முதல் 10 மணிக்குள் டோக்கன்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்ச எண்ணிக்கையை ரயில்வே நிர்வாகம் வரம்பிட்டுள்ளது. ஏசி டிக்கெட்டுகளுக்கு ஒரு கவுண்டருக்கு அதிகபட்சமாக 10 டோக்கன்களும் ஸ்லீப்பர்/ஏசி அல்லாத டிக்கெட்டுகளுக்கு ஒரு கவுண்டருக்கு அதிகபட்சமாக 15 டோக்கன்களும் வழங்கப்படும். டோக்கன் இல்லாதவர்களுக்கு டிக்கெட் வழங்கப்படாது என சொல்லப்பட்டுள்ளதால் தேவையின்றி மக்கள் காத்திருக்கும் நேர விரயம் இனி இருக்காது. அதேபோல் யாரும் மற்றொருவரின் பெயரிலோ அல்லது ஒரு முகவரின் சார்பாகவோ டோக்கனைப் பெற முடியாது.
டிக்கெட் பெற வருவோர் டோக்கன் வாங்கும் போது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற தங்களின் அசல் அடையாள அட்டையைச் சமர்ப்பிக்க வேண்டும். இடைத்தரகர்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக அந்த டோக்கனில் பயணிகளின் பெயர் குறிக்கப்பட்டிருக்கும். கவுண்டரில் பயணச்சீட்டு வாங்கும்போதும் இதே அடையாள அட்டை தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு வகையான கவுண்டர்கள் செயல்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு பிரிவு A ஒதுக்கப்படும். இதற்கு சம்பந்தப்பட்ட நபர் தன்னுடைய அடையாள அட்டை மட்டுமல்லாமல், பயணம் செய்யப்போகும் குடும்ப உறுப்பினர்கள் அடையாள சான்றையும் சமர்பிக்க வேண்டும். அதே சமயம் மற்ற அனைத்து முன்பதிவுகளுக்கும் பிரிவு B வழங்கப்படும். ஆனால் இதனை செயல்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
Before You Go
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
ட்ரெண்டிங் செய்திகள்






















