இனி, கண்களை மூட வேண்டிய அவசியம் இல்ல.. உச்ச நீதிமன்ற நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலை!
இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவின் பேரில் கண்களை திறந்த நீதி தேவதை சிலையானது உச்ச நீதிமன்றத்தில் திறக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் புதிய நீதி தேவதை சிலை நிறுவப்பட்டுள்ளது. வழக்கமாக, கண்களை மூடியபடியே நீதி தேவதை சிலை வைக்கப்படும். ஆங்கிலேயர் காலத்தில் இருந்து இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், மரபிலிருந்து புதிய மாற்றமாக கண்களை திறந்த நீதி தேவதை சிலையானது தற்போது வைக்கப்பட்டுள்ளது.
புதிய நீதி தேவதை சிலை:
இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் உத்தரவின் பேரில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நூலகத்தில் புதிய சிலை வைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, நீதி தேவதையின் கையில் ஆயுதம்தான் இருக்கும். ஆனால், புதிய சிலையில் ஆயுதத்திற்கு பதிலாக அரசியலமைப்பு புத்தகத்தை நீதி தேவதை கையில் ஏந்தியபடி உள்ளது.
கண்களை மூடிய நீதி தேவதை சிலை பாரபட்சமற்ற தன்மையைக் குறிக்கிறது. பணக்காரன், ஏழை, சாதி, மதம், அந்தஸ்து என எந்த வித பாகுபாடும் இன்றி நீதி வழங்குவதை குறிக்கும் விதமாக கண்களை மூடிய நீதி தேவதை சிலை வைக்கப்பட்டது. அதே நேரத்தில், கையில் இருந்த வாள் அதிகாரத்தையும் தண்டிக்கும் சக்தியையும் குறிக்கிறது.
தலைமை நீதிபதி போட்ட உத்தரவு:
ஆனால், மாறாக, புதிய சிலை அரசியலமைப்பு விழுமியங்களில் வேரூன்றிய நீதியின் முற்போக்கான பார்வையை பிரதிபலிக்கிறது. கண்களை திறந்த நீதி தேவதை சிலை, அனைவரையும் சமமாகப் பார்க்கிறது என்பதைக் குறிக்கிறது. அதே நேரத்தில் அரசியல் சட்டம் வன்முறை மூலம் அல்ல, நாட்டின் சட்டங்களின்படி நீதி வழங்கப்படுகிறது என்பதை வலியுறுத்துகிறது.
சமீபத்தில், இந்திய தண்டனைச் சட்டத்தை பாரதிய நியாய சன்ஹிதாவுடன் மாற்றியமைத்தது போல, காலனித்துவ காலச் சின்னங்களிலிருந்து விலகிச் செல்வதன் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: "நாட்டின் வளர்ச்சியில் வடகிழக்கு மாநிலங்கள் பெருமளவில் பங்கு வகிக்கின்றன - துணை குடியரசுத் தலைவர்