(Source: ECI/ABP News/ABP Majha)
NCRB report : தற்கொலையே கொடுமை.! அதிலும் இது கொடுமையிலும் கொடுமை - அதிர்ச்சி புள்ளிவிவரம்!
இந்தியாவில் நிகழும் குற்ற சம்பவங்கள், விபத்து உயிரிழப்புகள், இந்தியாவில் நிகழ்ந்த தற்கொலைகள், இந்திய சிறைச்சாலைகள் போன்ற அறிக்கையை தேசியக் குற்ற ஆவணக்காப்பகம் வெளியீட்டு வருகிறது
கொரோனா பேரிடர் காலத்தில், வாழ வழியில்லாத தினக் கூலிகள், சுய தொழில் செய்பவர்கள், தொழில் நிருவனங்களில் ஈடுபட்டவர்களில் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு அதிகரித்து காணப்படுவதாக தேசிய குற்ற ஆவணக்காப்பகம் அறிக்கையில் தெரிவித்தது. 2020ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கையை விட, இத்தகையப் பிரிவினர் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
ஆண்டுதோறும், இந்தியாவில் நிகழும் குற்ற சம்பவங்கள், விபத்து உயிரிழப்புகள், இந்தியாவில் நிகழ்ந்த தற்கொலைகள், இந்திய சிறைச்சாலைகள் பற்றிய புள்ளி விவரங்கள்’ போன்ற அறிக்கையை தேசியக் குற்ற ஆவண காப்பகத்தின் வெளியீட்டு வருகிறது. அந்தவகையில், 2020ம் ஆண்டுக்கான இந்தியாவில் நிகழ்ந்த தற்கொலைகள் குறித்த அறிக்கை சில தினங்களுக்கு முன்பு வெளியாகியது.
தினக்கூலிகள்: இதுவரை இல்லாத வகையில், நாடு முழுவதும் கடந்தாண்டில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் (1,53052) தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது,கடந்தாண்டை விட 10 சதவிகிதம் அதிகமாகும். இந்த எண்ணிக்கையில் அதிகபட்சமாக தினக் கூலி செய்யும் தொழிலாளர்கள் உள்ளனர். கடந்தாண்டில் மட்டும் 37666 பேர் (மொத்த எண்ணிக்கையில் 24%) வாழ வழியின்றி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இதில், பெண்கள் எண்ணிக்கை மட்டும் 4493 ஆக உள்ளது.
இல்லத்தரசி: 22372 இல்லத்தரசிப் பெண்கள் (ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 14.6 சதவிகிதம் ) கடந்தாண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
சுய வேலைவாய்ப்பு: அதற்கடுத்தப் படியாக, சுய வேலைவாய்ப்பில் ஈடுபட்டவர்கள் உள்ளனர். கடந்தாண்டில் மட்டும் 17332 பேர் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் போடப்பட்ட பொது முடக்கநிலை காரணமாக மோசமான பொருளாதார அழிவுகளை இவர்கள் சந்தித்து வந்ததை பல்வேறு ஆய்வுகள் பதிவு செய்திருந்தது.
வேலைவாய்ப்பின்மை: வேலை வாய்ப்பில்லாத (Unemployed persons) 15652 பேர் கடந்தாண்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். முன்னதாக, 2016-19 வரை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் வேலைவாய்ப்பின்மை காரணமாக 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10,294 பேர் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. கொரோனா பெருந்தொற்று பரவல் தொடங்குவதற்கு முன்பாகவே, 2019ல் வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டோரின் எண்ணிக்கை 24% (2016-ல் ஒப்பிடுகையில்) சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டும் 2016-19 வரையிலான நான்காண்டுகளில் 1,118 பேர் வேலைவாய்ப்பின்மை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளானர். தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து அரசுப் பணிக்காகக் காத்திருப்போரின் எண்ணிக்கை மட்டும் 67.76 லட்சமாக உள்ளது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 58 வயதைக் கடந்துவிட்டனர் என்பது வேதனை தரும் உண்மை. கலை, அறிவியல் படிப்பு, வணிகம், பொறியியல் படிப்பு, வேளாண்மை உள்ளிட்டப் பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்ற 9.34 லட்சம் பேரும் அரசுப் பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்துக் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில் நிறுவனங்கள் நடத்துவர்: கடந்தாண்டில் தெருவோர வியாபாரிகள், வணிகர்கள் மற்றும் இதர தொழில் மேற்கொள்பவர்களில் மட்டும் 11716 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது, அதே ஆண்டில் பதிவு செய்யப்பட்ட விவாசயிகள் தற்கொலை எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. பொதுவாக, தொழில் புரிபவர்களிடத்தில் தற்கொலை செய்துக் கொள்ளும் குறைந்துக் காணப்படும், கொரோனா பேரிடர் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சூழல் காரணமாக இந்தாண்டு அதிகரித்து காணப்படுவதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். வேளாண் துறைகளில் ஈடுபட்டவர்களில் 10677 பேர் கடந்தாண்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில நிலம் இல்லாத, விவாசாயக் கூலிகள் எண்ணிக்கை மட்டும் 5098 ஆக உள்ளது.
அரசு மற்றும் தனியார் துறைகளில் மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்களிடத்தில் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு குறைந்து காணப்படுவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.