நான் டயர்டும் ஆகல ரிட்டயர்டும் ஆகல: அஜித் பவார் விமர்சனத்திற்கு சரத் பவார் பதிலடி
கட்சியின் பெரும்பாலானோரின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும் வயதை கருத்தில் கொண்டு தீவிர அரசியலில் இருந்து சரத் பவார் விலக வேண்டும் என அஜித் பவார் சாடியிருந்தார்.
மகாராஷ்டிர அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவி வருகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுப்பட்ட நிலையில், அக்கட்சியின் தேசிய தலைவர் சரத் பவார், கட்சியின் மூத்த தலைவரும் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார் ஆகியோருக்கிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. பாஜக - சிவசேனா கூட்டணி அரசாங்கத்தில் இணைந்த அஜித் பவார், துணை முதலமைச்சராக பதவியேற்றார்.
"தீவிர அரசியலில் இருந்து சரத் பவார் விலக வேண்டும்"
கட்சியின் பெரும்பாலானோரின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும் வயதை கருத்தில் கொண்டு தீவிர அரசியலில் இருந்து சரத் பவார் விலக வேண்டும் என அஜித் பவார் சாடியிருந்தார். வயது குறித்த அஜித் பவாரின் விமர்சினம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அஜித் பவாருக்கு சரத் பவார் காட்டமான பதில் அளித்துள்ளார். தான் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று கட்சித் தொண்டர்கள் விரும்புவதால் தொடர்ந்து மக்கள் பணி ஆற்றுவேன் என சரத் பவார் கூறியுள்ளார்.
"நான் டயர்டும் ஆகல ரிட்டயர்டும் ஆகல"
"மொரார்ஜி தேசாய் எந்த வயதில் பிரதமரானார் தெரியுமா? நான் பிரதமராகவோ, அமைச்சராகவோ ஆக விரும்பவில்லை. மக்களுக்கு சேவை செய்யவே விரும்புகிறேன்" என்றும் சரத் பவார் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சொன்னதை மேற்கோள் காட்டி பேசிய அவர், "நான் சோர்வாகவும் இல்லை. ஓய்வு பெறவும் இல்லை. என்னை ஓய்வு பெறச் சொல்ல அவர்கள் யார்? என்னால் இன்னும் வேலை செய்ய முடியும்" என்றார்.
சரத் பவாரின் மகனாக இல்லாததால் தான் ஓரங்கப்பட்டதாக அஜித் பவார் குற்றம்சாட்டியுள்ளாரே என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "இதை பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. குடும்ப பிரச்னைகளை குடும்பத்திற்கு வெளியே பேசுவது எனக்கு பிடிக்காது. அஜித் பவார் அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் ஆக்கப்பட்டார். ஆனால், எனது மகள் சுப்ரியா சுலேவுக்கு அமைச்சர் பதவி வழங்க வாய்ப்பிருந்தபோதிலும் வழங்கப்படவில்லை.
எச்சரிக்கை விடுத்த சரத் பவார்:
மத்திய அரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மந்திரி பதவி கிடைத்த போதெல்லாம், அது மற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், சுப்ரியா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் அவருக்கு வழங்கப்படவில்லை.
சுப்ரியா சுலே அரசியலுக்கு வர வேண்டும் என்று கட்சியினர் விரும்பினர். அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிரபுல் படேலுக்கு 10 ஆண்டுகள் மத்திய அமைச்சர் பதவி கொடுத்தோம். மக்களவை தேர்தலில் அவர் தோல்வியடைந்ததால், அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுத்தோம். அதிருப்தியாளர்கள் அனைவரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்" என்றார்.
அஜித் பவாரை தவிர்த்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 8 எம்எம்ஏக்கள், பாஜக - சிவசேனா அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர்களாக பதவியேற்றனர்.