`370-வது சட்டப்பிரிவை அகற்றுவது சட்டவிரோதமானது!’ - ஜம்மு காஷ்மீரில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் உமர் அப்துல்லா!
ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைவதற்கு அடிப்படையாக சட்டப்பிரிவு 370 இருப்பதால் அதனை நீக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா இந்திய அரசியலமைப்பில் 370வது சட்டப்பிரிவு தற்காலிகமானதாக இருந்ததாகவும், இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைவதற்கு அடிப்படையாக அந்தச் சட்டம் இருப்பதால் அதனை நீக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் ஒமர் அப்துல்லா பூன்ச் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, `இந்திய சுதந்திரத்தின் போது, காஷ்மீர் விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் 370வது சட்டப்பிரிவுக்கு நிரந்தர அந்தஸ்து வழங்கப்படவில்லை. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி எனவும், அதனைப் பிரிக்க முடியாது எனவும் கூறிக் கொண்டு, இந்தியாவுடன் இணைவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்த சட்டத்தை நீக்க முடியாது’ எனக் கூறியுள்ளார்.
எனினும் இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், அதுதொடர்பாக விவாதத்தில் ஈடுபட விருப்பம் இல்லை என ஒமர் அப்துல்லா கூறியுள்ளார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி நீதிமன்றத்தின் கோடை விடுமுறைக் காலம் முடிவடைந்த பிறகு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், `வழக்கு விசாரணை தொடங்கும் போது, நமது வாதங்களை நீதிமன்றத்தின் முன்வைப்போம்’ எனக் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவைக் கோடை விடுமுறைகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் விசாரணை மேற்கொள்வதாக கூறியுள்ள நிலையில், ஒமர் அப்துல்லாவின் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சுமார் இருபதுக்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தேசிய மாநாட்டுக் கட்சியின் மக்களவை உறுப்பினர் முகமது அக்பர் லோன், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபது ஹஸ்னைன் மசூதி முதலானோர் இந்த விவகாரத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக உடைத்திருப்பதைக் குறிப்பிட்டு பேசியுள்ள ஒமர் அப்துல்லா, `ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட உதாரணம் இந்திய வரலாற்றில் இல்லை. உத்தரப் பிரதேசம், பீகார், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, அவற்றை யூனியன் பிரதேசங்களாக மாற்றப்படவில்லை. ஒரு மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு, இரண்டு பகுதிகளுமே யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது இதுவே முதல்முறை’ என்று தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள சட்டமன்றத் தொகுதிகள், நாடாளுமன்றத் தொகுதிகள் ஆகியவற்றின் புதிய எல்லைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஒமர் அப்துல்லா அப்பகுதிகளின் தேசிய மாநாட்டுக் கட்சிக்கான ஆதரவைத் திரட்டி வருகிறார். புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள எல்லைகளின் அடிப்படையில் அம்மாநிலத் தேர்தல்கள் நடைபெறும் எனப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.