Maha Kumbh Mela-Nasa: விண்வெளியில் இருந்து மகா கும்பமேளா.! கிளிக் செய்த இஸ்ரோ, நாசா...
Maha Kumbh Mela ISRO NASA Image: உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில், மகா கும்பமேளா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நாசா மற்றும் இஸ்ரோ விண்வெளியில் இருந்து புகைப்படங்களை எடுத்துள்ளன.

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து குமபமேளா:
உலகின் மிகப்பெரிய அளவில் மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வான மகா கும்பமேளா 2025, நிகழ்வானது தரையில் இருந்து மட்டுமல்ல, விண்வெளியிலிருந்தும் இருக்கும் காட்சிகள் வியக்க வைக்கும் வகையில் உள்ளது. இந்நிலையில், பூமியை சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையமானது, இரவு நேரத்தில் மகா கும்பமேளாவின் பிரமிக்க வைக்கும் காட்சிகளைப் படங்களாக எடுத்தது. இந்தப் படங்கள் மகா கும்பமேளா நிகழ்வின் பிரம்மாண்டத்தை வெளிப்படுத்துகின்றன. கங்கை நதிக்கரையில் ஒளிரும் விளக்குகளுடன் உலகின் மிகப்பெரிய அளவில் மக்கள் ஒன்று கூடலை இப்படம் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது. விண்வெளி வீரர் டான் பெட்டிட், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த படங்களை சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
2025 Maha Kumbh Mela Ganges River pilgrimage from the ISS at night. The largest human gathering in the world is well lit. pic.twitter.com/l9YD6o0Llo
— Don Pettit (@astro_Pettit) January 26, 2025
மகா கும்பமேளாவின் விளக்குகளின் பிரம்மாண்டத்தையும், கங்கை நதிக்கரையை ஒரு தனித்துவமான காட்சியாக மாற்றும் பெரும் மக்களின் ஒன்று கூடலையும் படங்கள் காட்டுகின்றன. இந்த மகா கும்பமேளா உலகின் மிகப்பெரிய மத நிகழ்வாகும். அங்கு கோடிக்கணக்கான பக்தர்கள் ஆன்மீக அமைதியை அடைய கங்கை நதியில் நீராடுகிறார்கள். இதுவரை, 13 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். இங்கிருந்து வெளிவரும் காட்சிகள் உலகம் முழுவதையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
இதற்கு முன்பு கும்பமேளாவிற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள செயற்கைக்கோள் காட்சிகளை, இஸ்ரோ வெளியிட்டிருந்தது. அதில், தற்காலிகமாக நதியின் குறுக்காக , பல்வேறு பாலங்கள் உருவாக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.

மகா கும்பமேளா
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை , மகா கும்பமேளா பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆன்மீக கொண்டாட்ட நிகழ்வில் துறவிகள், ஆண்கள் , பெண்கள், குழந்தைகள், பண்டிதர்கள் மற்றும் பலர் குவிகின்றனர். கடந்த ஜனவரி 13 ஆம் தேதி, பிரயாக்ராஜில் தொடங்கிய மகா கும்பமேளா, பிப்ரவரி 26 புதன்கிழமை வரை தொடர்ந்து நடைபெறும். வரலாற்று ரீதியாக, கும்பமேளா புனித நீரில் நீராடுவதுடன், பாவங்களைப் போக்குவதற்கும், மோட்சத்திற்கான பாதையில் இறங்குவதற்கும் முக்கிய நிகழ்வாகவும் கருதப்படுகிறது.
பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் கொண்டாடப்படும் கும்பமேளாவானது, மூன்று புனித நதிகளான கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதியின் ( பூமிக்கு அடியில் பாயும் நதி ) சந்திக்கு இடமாக கருதப்படுகிறது.
Also Read: அமெரிக்கா GPS-க்கு மாற்றாக களமிறங்கிய ISRO: 100வது ராக்கெட் GSLV-F15 கவுண்டவுன் தொடங்கியது
செய்ய வேண்டியவை:
• சங்கமத்தின் படித்துறையை அடைய வழிகாட்டப்பட்ட பாதைகளைப் பயன்படுத்தவும்.
• கங்கை நீராடலுக்குச் செல்லும்போது உங்கள் வரிசையில் இருக்கவும்.
• குளித்து தரிசனம் செய்த பிறகு, நேரடியாக வாகனம் நிறுத்துமிடத்திற்குச் செல்லுங்கள்.
• கோயில்களுக்குச் செல்லும்போது, உங்கள் பாதை வழியே, செல்லுங்கள்.
• தேவைப்பட்டால் காவல் துறையினர் உதவியை நாடுங்கள்.
• உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், அருகிலுள்ள மருத்துவமனையில் பரிசோதிக்கவும்.
• தடுப்புகள் மற்றும் பாலங்களில் பொறுமையாக இருக்கவும்; அவசரப்படுவதைத் தவிர்க்கவும்.
• காகிதம், சணல் அல்லது சுற்றுச்சூழலுக்கு உகந்த பாத்திரங்கள் மற்றும் களிமண் கோப்பைகளை பயன்படுத்தவும்.
• எல்லா படித்துறைகளும் சங்கமத்தின் ஒரு பகுதியே; நீங்கள் அடையும் படித்துறையில் குளிக்கவும்.

செய்யக்கூடாதவை:
• பக்தர்கள் ஒரே இடத்தில் கூட்டமாக நிற்கக்கூடாது.
• பக்தர்கள் வரும்போது அல்லது வெளியேறும்போது நேருக்கு நேர் சந்திப்பதைத் தவிர்க்கவும்.
• மேளாவில் பரப்பப்படும் வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம்.
• சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் எந்த தவறான தகவலையும் நம்ப வேண்டாம்.
• கோயில்களுக்குச் செல்லும்போது அவசரப்பட வேண்டாம்.
• உரிய இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்குப் பதிலாக பாதைகளில் நிறுத்துவதைத் தவிர்க்கவும்; எந்த வழிகளையும் தடுக்க வேண்டாம்.
• ஏற்பாடுகள் அல்லது சேவைகள் பற்றிய தவறான தகவல்களை ஏற்க வேண்டாம்.
• தவறான செய்திகளை பரப்புவதைத் தவிர்க்கவும்.
• புனித நீராடலுக்கு அவசரப்பட வேண்டாம்.
• பிளாஸ்டிக் பைகள், பாத்திரங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.





















