இனி எதிர்கட்சிகளின் குரல் நசுக்கப்படாது: எலான் மீது நம்பிக்கை வைக்கிறாரா ராகுல்?
வெறுப்பு பேச்சுக்கு எதிராக ட்விட்டர் நடவடிக்கை எடுக்கும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், ட்விட்டரை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்குவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தார். ஆனால், ட்விட்டர் நிர்வாகத்திடம் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அந்த முடிவை ஒத்திவைப்பதாக தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, ட்விட்டர் தரப்பில் மஸ்க் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணை விரைவில் வரவிருந்த நிலையில், ட்விட்டரை நேற்று முழுவதுமாக எலான் மஸ்க் கையகப்படுத்தினார். அதோடு, ட்விட்டர் தலைமை நிர்வாக அலுவலர் பரக் அக்ரவால், சட்ட நிபுணர் விஜய கட்டே, தலைமை நிதி அதிகாரி நெட் சீகல் உள்ளிட்ட நான்கு பேரை பணி நீக்கம் செய்தார்.
ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெறுப்பு பேச்சு அதிகரித்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Congrats @elonmusk.
— Rahul Gandhi (@RahulGandhi) October 28, 2022
I hope @Twitter will now act against hate speech, fact check more robustly, and will no longer stifle the opposition’s voice in India due to government pressure. pic.twitter.com/j2unZeYYj6
இந்நிலையில், வெறுப்பு பேச்சுக்கு எதிராக ட்விட்டர் நடவடிக்கை எடுக்கும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இனி, உண்மை செய்திகள் முழுவதுமாக சரி பார்க்கப்படும் என்றும் அரசின் அழுத்தம் காரணமாக எதிர்கட்சிகளின் குரல் நசுக்கப்படாது என நம்புவதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், ட்விட்டர் பக்கம் தவறாக கையாளப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். வரைபடம் ஒன்றை வெளியிட்டு, தனக்கு புதிய ஃபாலோயர்கள் அதிகரிக்காமல் இருந்ததை மேற்கோள் காட்டியுள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் முதல் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை, அவருக்கு புதிதாக ஃபாலோயர்கள் அதிகரிக்கவே இல்லை.
இதில், தங்கள் தரப்பில் எந்த தவறும் நடைபெறவில்லை என குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ட்விட்டர் மறுத்து வருகிறது. ஆனால், இது தொடர்பாக, 20 முறை கோரிக்கை வைக்கப்பட்டதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு, ஜனவரி முதல், ட்விட்டரில் ராகுல் காந்தியின் புதிய பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஆனால், பிப்ரவரி 2022 க்குப் பிறகு, அவர் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருந்ததையே அந்த வரைபடம் எடுத்துரைக்கிறது.
முன்னதாக, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தைப் பகிர்ந்த காரணத்தால், ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு சிறிது நேரம் முடக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், தேசியக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், ராகுல் காந்தியை எச்சரித்திருந்தது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை ராகுல் காந்தி ட்விட்டரில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.