Mumbai: 'பறக்கும் முத்தம்' என்றாலும் தப்பு தப்புதான்..! குற்றவாளியை வெளுத்துவாங்கிய நீதிமன்றம்!
இளம்பெண்ணுக்கு ப்ளையிங் கிஸ் அனுப்பியதுடன் ஆபாசமாக செயல்பட்ட நபரை விடுவிக்க முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பையில் உள்ள குர்லா மாவட்ட நீதிமன்றத்தில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதால் 28 வயதான இஷ்திகர் ஷேக் என்ற இளைஞர் கைது செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தனது வாதத்தின்போது, “ கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 14-ந் தேதி பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் பணி காரணமாக வெளியே சென்றிருந்தனர்.
அப்போது, குற்றம்சாட்டப்பட்டுள்ள இளைஞர் வீட்டின் கதவு அருகே வந்துள்ளார். பின்னர், “ப்ளையிங் கிஸ்” எனப்படும் பறக்கும் முத்தங்களை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அனுப்பினார். மேலும், ஆபாசமான செய்கைகளையும் செய்துள்ளார். அப்போது, அந்த பெண் போய்விடு என்று கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். பின்னர், அந்த இளைஞர் அந்த பெண்ணின் கைகளைப் பிடித்து, வெளியே இழுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணும், அவரது சகோதரியும் உதவிக்காக கூச்சலிட்டனர்.
அவர்களது கூச்சல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அங்கு கூடினர். ஆனாலும், அந்த இளைஞர் அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றார். இதையடுத்து, தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.” இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டுள்ள இளைஞர் தரப்பினர், அந்த பெண்ணுக்கும், குற்றம் சாட்டப்பட்டவருக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்தது என்றும், அவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அவரை பொய்யாக இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளனர் என்று வாதாடினர். ஆனால், நீதிமன்றம் அவரது வாதத்தை ஏற்க மறுத்துவிட்டது.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிமன்றம், "இளைஞர் தரப்பினர் தங்களது தற்காப்பிற்காக எந்த வாதத்தையும் கொண்டுவரவில்லை. இதை தற்போதைய வழக்கு என்றும் முடிவுக்கு வர முடியாது. எனவே, குற்றம் சாட்டப்பட்டவரின் தற்காப்பு என்பது சாத்தியமற்றது. இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் ஒரு பெண்ணுக்கு எதிராக மிகவும் கடுமையாக செயல்பட்டுள்ளார்.
ஐ.பி.சி. 354 பிரிவின் விதி பொது ஒழுக்கம் மற்றும் கண்ணியமான நடத்தையை பாதுகாப்பதற்காக இயற்றப்பட்டுள்ளது. எனவே, எந்தவொரு நபரும் ஒரு அடக்கத்தின் மீது கிரிமினல் சக்தியை பயன்படுத்தினால் அவர் கோபமடைவார். சோதனையின் பலனை அவருக்கு நீட்டிக்க முடியாது. இதனால், குற்றம் சாட்டப்பட்ட இஸ்திகார் ஷேக்கின் மனுவை குற்றவாளிகள் நன்னடத்தை சட்டத்தின் கீழ் தண்டனையை அனுபவிப்பதற்கு பதிலாக, நன்னடத்தையுடன் விடுவிக்க நீதிமன்றம் அனுமதிக்கவில்லை.”
இவ்வாறு நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்