Most Polluted Cities: உலகிலேயே மிகவும் மோசமாக மாசடைந்த நகரங்கள் - டாப்-10ல் இந்தியாவில் இருந்து இத்தனை நகரங்களா?
Most Polluted Cities in the World: உலகிலேயே மிகவும் மோசமாக மாசடைந்த நகரங்களின் பட்டியலில், இந்தியாவில் இருந்து டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட நகரங்கள் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன.
Most Polluted Cities in the World: உலகிலேயே மிகவும் மோசமாக மாசடைந்த நகரங்களின் பட்டியலில், பாகிஸ்தானின் லாகூர் முதலிடத்தை பெற்றுள்ளது.
காற்று மாசுபாடு:
நிகழ்நேரத்தில் காற்றின் தரத்தை கணக்கிடும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த IQAir நிறுவனத்தின் அறிக்கையின்படி, புதன்கிழமை (நவ. 09) காலை உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த மூன்று நகரங்கள் இடம்பெற்றுள்ளன. 'அபாயகரமான' பிரிவில் ஒட்டுமொத்தமாக காற்று மாசு குறியீடு 455-ஐ பெற்று, பாகிஸ்தானின் லாகூர் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. இது அபாயகரமான அளவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நகரங்கள்:
இந்த பட்டியலில் காற்று மாசு குறியீடு 443-ஐ பெற்று ஆபத்தான பிரிவில், தலைநகரம் டெல்லி நாட்டிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக பதிவாகியுள்ளது. அதேநேரம், சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் கொல்கத்தா மற்றும் மும்பை நகரங்கள் முறையே ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களைப் பிடித்தன. வங்கதேசத்தின் டாக்கா, இந்தோனேசியாவின் ஜகார்த்தா, வியட்நாமின் ஹனோய் மற்றும் பாகிஸ்தானின் கராச்சி ஆகிய நகரங்களும் காற்று மாசுபாட்டால் மோசமாக பாதிக்கப்பட்ட நகரங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
நகரங்களின் பட்டியல்:
எண் | நகரங்கள் | AQI |
1 | லாகூர், பாகிஸ்தான் | 455 |
2 | டெல்லி | 443 |
3 | கராச்சி, பாகிஸ்தான் | 275 |
4 | தாக்கா, வங்கதேசம் | 222 |
5 | கொல்கத்தா, இந்தியா | 198 |
6 | மும்பை, இந்தியா | 172 |
7 | ஜாகர்தா, இந்தோனேஷியா | 155 |
8 | ஹனோய், வியட்நாம் | 152 |
9 | பாக்தத், ஈராக் | 143 |
10 | ஹொ சி மின், வியட்நாம் | 133 |
எச்சரிக்கும் ஆய்வறிக்கை:
காற்று மாசு குறியீடு 0 - 50 வரை இருந்தால் அது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. அதுவே 400-500 வரை சென்றால் ஆரோக்கியமான நபர்களுக்கு கூட ஆபத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மோசமானதாக அமையும். இந்த மாத தொடக்கத்தில் மற்றொரு ஆய்வறிக்கை வெளியானது. அதில், காற்று மாசுபாடு நெருக்கடியை எதிர்கொள்ளும் இந்தியாவின் எட்டு முக்கிய மாநிலத் தலைநகரங்களில், கடந்த ஐந்து ஆண்டுகளில் அக்டோபரில் டெல்லியில் அதிகபட்சமாக மாசு துகள்கள் 2.5 அளவில் இருந்தது. 2021 முதல் டெல்லியில் காற்றில் இடம்பெறும் துகள்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை விட 2023 அக்டோபரில் அவை 4.4% அதிகரித்துள்ளன. மும்பையில் காற்றில் இருக்கும் மாசு துகள்களின் அளவு கடந்த 4 ஆண்டுகளில் 110 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
டெல்லியை அச்சுறுத்தும் காற்று மாசுபாடு:
தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தேசிய தலைநகரை சுற்றியுள்ள பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவது ஒரு முக்கிய காரணமாக உள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் நேரத்தில் மீண்டும் காற்று மாசுபாடு அதிகரிப்பது சர்வதேச அளவில் பிரச்னையாக உள்ளது. இந்திய நகரங்களில் நிலவி வரும் மோசமான புகை மூட்டம் குறித்து உலக கிரிக்கெட் வீரர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். மூச்சுத்திணறல் ஏற்படும் சூழலில் ஆட்டத்தை விளையாடி வருவதாக கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.