கைவிரிக்கும் நிறுவனங்கள்; மாநிலங்களின் நேரடி தடுப்பூசி கொள்முதலுக்கு சிக்கல்!
‛பிற நாடுகளின் மத்திய அரசுகளிடம் இருந்து மட்டுமே ஆர்டர்கள் மற்றும் வர்த்தகம் செய்வோம். அத்துடன் எங்களுடைய நிறுவனத்தில் தற்போது வெளிநாடுகளுக்கு அனுப்ப போதிய தடுப்பூசிகள் இல்லை. எனவே இந்த ஆண்டு இறுதிவரை எங்களால் அனுப்ப முடியாது,’ என மாநில அரசு வைத்த தடுப்பூசி கோரிக்கைக்கு வெளிநாட்டு தடுப்பூசி நிறுவனம் அதிர்ச்சி பதிலளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக அனைத்து மாநிலங்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக மாநிலங்கள் தங்களது மக்களுக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள் ஆகியவற்றை நடத்தி வருகின்றன. எனினும் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக குறைந்த அளவிலான மக்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். தடுப்பூசி பற்றாக்குறையை தடுக்க மாநில அரசுகள் தடுப்பூசியை வெளிநாடுகளில் இருந்தும் நேரடியாக வாங்கி கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்தது.
இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனா தடுப்பூசி வாங்க டெண்டர்கள் விடுத்தனர். அதேபோல் பஞ்சாப் மாநிலம் சார்பில் மாடெர்னா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்திடம் தடுப்பூசிக்கள் ஆர்டர் செய்யப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தின் ஆர்டரை ஏற்க மறுத்த மாடெர்னா நிறுவனம் அதற்கு ஒரு விளக்கத்தையும் அளித்துள்ளது. அதில், "எங்களுடைய நிறுவனத்தின் கொள்கையின்படி நாங்கள் பிற நாடுகளின் மத்திய அரசுகளிடம் இருந்து மட்டுமே ஆர்டர்கள் மற்றும் வர்த்தகம் செய்வோம். அத்துடன் எங்களுடைய நிறுவனத்தில் தற்போது வெளிநாடுகளுக்கு அனுப்ப போதிய தடுப்பூசிகள் இல்லை. எனவே இந்த ஆண்டு இறுதிவரை எங்களால் அனுப்ப முடியாது"எனத் தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் விளக்கம் மாநிலங்களுக்கு தடுப்பூசி பெறுவதில் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே மற்றொரு கொரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான ஃபைசரும் மத்திய அரசுடன் சில சலுகைகளை பெற்ற பின்பு தான் மாநிலங்களுக்கு தடுப்பூசி அளிக்க முடியும் என்று தெரிவித்திருந்தது. இந்தச் சூழலில் தற்போது மாடெர்னா நிறுவனம் அதே விளக்கத்தை தெரிவித்துள்ளது. இதனால் மாநிலங்களுக்கு தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல் நீடிக்கும் வாய்ப்பு எழுந்துள்ளது.
மத்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கையின்படி 50 சதவிகித தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும். மீது உள்ள 50 சதவிகித தடுப்பூசிகளை மாநிலங்கள் நேரடியாக பெற்று கொள்ள வேண்டும். இந்தச் சூழலில் தற்போது மாநிலங்கள் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை மட்டுமே பெறக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இந்த நிறுவனங்களிடமும் தற்போது போதிய தடுப்பூசி இல்லாததால் மாநிலங்களுக்கு தடுப்பூசி கிடைக்க நீண்ட நாட்கள் ஆகும் நிலை உருவாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் ஏற்கெனவே போதிய தடுப்பூசி இல்லாததால் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி கிடைக்கவில்லை. மத்திய அரசு அனுமதி வழங்கி 24 நாட்களுக்கும் பிறகும் இன்னும் பல மாநிலங்களில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு சரியாக தடுப்பூசி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வெல்ல ஒரே ஆயுதம் தடுப்பூசி என்று இருக்கும் போது அது மாநிலங்களுக்கு உடனடியாக கிடைக்க மத்திய அரசு வழி வகை செய்ய வேண்டும் என்பது வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.