2019ம் ஆண்டு காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன்..! 4 ஆண்டு போராட்டத்திற்கு பின் மீட்பு..!
உத்தரப் பிரதேசத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவன் அலிகரில் உள்ள அவரது குடும்பத்தாருடன் சேர்க்கப்பட்டார்.
உத்தரப் பிரதேசத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவன் அலிகரில் உள்ள அவரது குடும்பத்தாருடன் சேர்க்கப்பட்டார். அந்தச் சிறுவன் பிரோசாபாத் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டார்.
காணாமல் போன குழந்தை:
இது குறித்து போலீஸ் எஸ்,பி. கலாநிதி நைதானி கூறுகையில், குவாரிஸ் காவல் நிலையத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு அந்தச் சிறுவன் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் சிறுவனை அப்போது கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் பெற்றோர் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து தேடிவந்தனர். போலீஸையும் தொடர்ந்து தொடர்பில் கொண்டு வந்தனர்.
இந்நிலையில், அந்தச் சிறுவன் ஃபிரோசாபாத் ஆதரவற்ற சிறார் இல்லத்தில் இருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். பின்னர் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உரிய பரிசோதனைகளுக்குப் பின்னர் சிறுவன் குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்பட்டார். சிறுவனைக் கண்டு பிடிக்க தொடர்ந்து செயல்பட்ட காவலர்கள் குழுவிற்கு ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.
சர்வதேச காணாமல் போன குழந்தைகள் நாள்
சர்வதேச காணாமல் போன குழந்தைகள் நாள் (International Missing Children's Day) எனும் இந்நாள், காணாமல் போன குழந்தைகளுக்கான சர்வதேச நாள் ஒவ்வொரு ஆண்டும் மே 25-ம் நாள் கொண்டாடப்படுகிறது. காணாமல் போகும் எதிர்காலத் தலைமுறையினரான குழந்தைகளுக்கு அரசு மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பு அவசியம் என்பதை வலியுறுத்தும் நோக்கில் இந்த நாள் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்தியாவில் காணாமல் போகும் குழந்தைகள்
சர்வதேச அளவில், ஆண்டுக்கு சராசரியாக ஒரு இலட்சம் குழந்தைகள் காணாமல் போவதாகவும் அதில் பெண்பாலர்கள் 55 சதவிதமும், ஆண்பாலர்கள் 45 சதவிதமும் காணாமல்போவதாக ஆய்வறிக்கைகள் உள்ளது. மேலும், இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் 45 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போகின்றனர் என்றும் இதில் தமிழகத்தில் மட்டும் 11 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போவதாகவும் தேசியக் குற்றப் பதிவு ஆணையச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் மேற்கு வங்கமும், அடுத்த இடத்தில் தமிழகம் இருப்பதாக அறியப்படுகிறது.
குழந்தைகள் காணாமல் போகக் காரணங்கள் என்ன?
குழந்தைகள் காணாமல் போவதற்குப் பல காரணங்கள் உள்ளன. தற்போது வீட்டில் பெற்றோர்கள் கண்டிப்பதால் சினங்கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், உடல் உறுப்புகளைத் களவாடி விற்கும் சமூகவிரோதிகள் குழந்தைகளைக் கடத்துவதாகவும் சென்னை குழந்தைகள் நலகுழுமத்தின் உறுப்பினர் ஷிலா சார்லஸ் மோகன் கூறுகின்றார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட வைக்க 10 வயது முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், மற்றும் பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்துவதற்கும் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். குறிப்பாக 6 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் தான் அதிக அளவில் கடத்தப்படுவதாக ஆய்வறிக்கை உள்ளது.