மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் நெருக்கடி...பிணை மனுவை நிராகரித்த டெல்லி நீதிமன்றம்..!
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில், இது தொடர்பாக மார்ச் 7ஆம் தேதி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து, அவரை காவலில் எடுத்தது.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் பிப்ரவரி 26ஆம் தேதி கைது செய்தனர். டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சிபிஐ இந்த நடவடிக்கையை எடுத்திருந்தது. தொடர் அரசியல் அழுத்தம் காரணமாக டெல்லி துணை முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டி இருந்தது.
மேலும் இரண்டு வாரங்களுக்கு காவல் நீட்டிப்பு:
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில், இது தொடர்பாக மார்ச் 7ஆம் தேதி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து, அவரை காவலில் எடுத்தது. அமலாக்கத்துறையின் காவல் முடிவுக்கு வந்த நிலையில், இந்த வழக்கில் சிசோடியாவின் காவலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிசோடியாவை ஏப்ரல் 5ஆம் தேதி வரை சிறையில் வைக்க சிறப்பு நீதிபதி எம்.கே. நாக்பால் உத்தரவு பிறப்பித்திருந்தார். இது தொடர்பாக, அமலாக்கத்துறை அவரை 7 நாள்களாக விசாரித்து வந்தது. இதையடுத்து, சிபிஐ தொடுத்த வழக்கில் பிணை கோரி அவர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மனைவிக்கு உடல்நிலை சரியில்லை:
பிணை கேட்டு சிசோடியா தாக்கல் செய்த மனுவில், "மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. அவளைக் கவனிக்க யாரும் இல்லை. எனது மகன் வெளிநாட்டில் படிக்கிறார். எனவே, அவரைப் பார்த்துக் கொள்வது எனது பொறுப்பு" என குறிப்பிடப்பட்டது.
சிசோடியாவுக்கு பிணை அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிபிஐ, "அவர் அரசாங்கத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறார். அவர் வழக்கு தொடர்பான ஆதாரங்களை எளிதில் மறைக்க முடியாது. ஆனால், அழிக்க முடியும்" என வாதிட்டது.
இதற்கு எதிராக வாதம் முன்வைத்த சிசோடியா தரப்பு, "டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைத்துள்ளேன். எந்த ஒரு விசாரணையிலும் எனக்கு எதிரான ஆதாரங்கள் வெளிப்படுத்தவில்லை. எனவே, விசாரணை இனி தேவை இல்லை. நாட்டை விட்டு தப்பித்து செல்ல வாய்ப்பில்லை" என தெரிவித்தது.
பிணை மனு நிராகரிப்பு:
இதையடுத்து, வழக்கின் விசாரணை மார்ச் 24ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இச்சூழலில், இன்றைய விசாரணையில் சிசோடியாவின் பிணை மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்தது.
முன்னதாக, எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி, பிரதமர் மோடிக்கு எதிர்கட்சிகளை சேர்ந்த 8 தலைவர்கள் ஏற்கனவே, கடிதம் எழுதியிருந்தனர்.
பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவரும் தெலங்கானா முதலமைச்சருமான கே. சந்திரசேகர ராவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் பஞ்சாப் முதலமைச்சருமான பகவந்த் மான், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.