Manipur Violence : மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கூட விட்டு வைக்காத பெண்கள்.. மணிப்பூரில் மீண்டும் வன்முறை..பழங்குடி படுகொலை
மனநலம் பாதிக்கப்பட்ட 55 வயதான லூசி மாரிங் என்ற நாகா பெண், இம்பால் கிழக்கு பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
மணிப்பூரில் மீண்டும் வன்முறை சம்பவம் நடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நடந்த இரண்டு வெவ்வேறு வன்முறை சம்பவங்களில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். முதல் சம்பவம் இம்பால் கிழக்கு பகுதியில் சனிக்கிழமை நடந்துள்ளது.
மனநல பாதிக்கப்பட்ட பெண்ணை கூட விட்டு வைக்காத கும்பல்:
மனநலம் பாதிக்கப்பட்ட 55 வயதான லூசி மாரிங் என்ற நாகா பெண், இம்பால் கிழக்கு பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். தலையில் சுடப்பட்டு, முகம் சிதைந்த நிலையில், அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக ஐந்து பெண்கள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு ஆயுதங்கள், ஐந்து தோட்டாக்கள் மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்திய கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பு ட்விட்டரில் தகவல் பகிர்ந்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாகா கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், "பாதிக்கப்பட்ட பெண் ஒரு பெண் குழுவால் பலவந்தமாகப் பிடித்து செல்லப்பட்டார். தனியார் போராளிக்குழுவிடம் அந்த பெண் ஒப்படைக்கப்பட்டு, அவர்களால் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்து மணிப்பூரின் நாகா மக்கள் வாழும் பகுதிகளில் திங்கள்கிழமை 12 மணி நேர கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
பழங்குடி இளைஞர் படுகொலை:
மணிப்பூரில் மெய்தி, குகி சமூக மக்களிடையே கடந்த இரண்டு மாதங்களாக மோதல் நிலவி வரும் நிலையில், இரு தரப்பினரிடையே சமாதானம் பேசி, அமைதியை நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறார் நாகா மக்கள். ஆனால், தற்போது, அவர்கள் சமூகத்தை சேர்ந்த மனநல பாதிக்கப்பட்ட பெண் ஒருவரே கொல்லப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்பசடுத்தியுள்ளது.
நாகா பெண்ணின் கொலைக்கு காரணமான குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாகா கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. 20 பழங்குடியினரை உள்ளடக்கிய நாகா பிரிவு, பழங்குடியினர் அல்லாத மெய்தி சமூக மக்களுக்கு அடுத்தபடியாக மணிப்பூரின் இரண்டாவது பெரிய சமூகமாக உள்ளது. இம்பால் பள்ளத்தாக்கில் செல்வாக்கு செலுத்தி வருகிறது.
மற்றொரு வன்முறை சம்பவத்தில், சுமார் 40 முதல் 50 ஆயுதமேந்திய குற்றவாளிகள் மலைப்பகுதியில் உள்ள காங்போக்பி மாவட்டத்தில் உள்ள குக்கி கிராமமான லைமடன் தங்க்புஹ் மீது தாக்குதல் நடத்தினர். அங்கு ஜாங்கோலுன் ஹொக்கிப் என அடையாளம் காணப்பட்ட 34 வயது நபர் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கு முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில், மலையடிவாரத்தில் இரு குழுக்களிடையே துப்பாக்கிச் சூடு நடந்ததாக பாதுகாப்புப் படையினர் தகவல் வெளியிட்டிருந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ராணுவப் பிரிவினர், ஆயுதமேந்திய குற்றவாளிகள் வெளியேற பயன்படுத்திய பாதைகளை துண்டித்தனர்.
காவல்துறை, ராணுவம் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) ஆகியவற்றின் கூட்டு படை காங்போக்பி மற்றும் இம்பால் மேற்கு மாவட்டங்களை ஒட்டியுள்ள பைலெங் மலைப்பகுதியில் நேற்று ஆறு மணி நேரமாக தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்த நடவடிக்கையின் போது, ஆயுதமேந்திய மர்மநபர்களால், ராணுவம் அடங்கிய கூட்டு படை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பாதுகாப்புப் படையினர் ஐந்து பதுங்கு குழிகளை அழித்ததுடன், M16A2 துப்பாக்கி, 9 மிமீ கார்பைன் மற்றும் சில தோட்டாக்களை தேடுதல் நடவடிக்கையின் போது மீட்டுள்ளனர்.