Manipur Firing: மணிப்பூரில் மீண்டும் வன்முறை.. பாதுகாப்பு படை வீரர்களை தாக்கிய கும்பல்.. துப்பாக்கிச்சூட்டால் பரபரப்பு
கடந்த சில நாள்களாக மணிப்பூரில் சற்று அமைதி நிலவி வந்த நிலையில், தற்போது வெடித்துள்ள வன்முறை மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே 3ஆம் தேதி, மணிப்பூரில் இனக்கலவரம் வெடித்தது. கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் நாட்டையே உலுக்கியது. குறிப்பாக, பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் வீடியோவாக வெளியாகி நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்திய மணிப்பூர் சம்பவம்:
பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கைளை ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் நடுரோட்டில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரு பெண்களையும் அந்த கும்பல் வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம், நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து, நாட்டின் பல்வேறு இடங்களில் மணிப்பூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மணிப்பூர் விவகாரத்தால், கடந்த வியாழக்கிழமை தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முடங்கி போயுள்ளது.
இந்த நிலையில், மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. கடந்த சில நாள்களாக மணிப்பூரில் சற்று அமைதி நிலவி வந்த நிலையில், தற்போது வெடித்துள்ள வன்முறை மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரில் மீண்டும் வன்முறை:
மியான்மர் எல்லையில் அமைந்துள்ள தெங்னௌபால் மாவட்டத்தின் மோரே நகரத்தில்தான் இந்த வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதுகாப்பு படையினர் தங்கியிருந்த தற்காலிக முகாமை கும்பல் தாக்கியதால், அவர்கள் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். வனத்துறை கட்டிடமும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவதற்காக இயங்கி வரும் அரசு சாரா அமைப்புகள், இந்த சம்பவம் குறித்து விளக்குகையில், "ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, அத்தியாவசியப் பொருட்களை வாங்கச் சென்ற சில பெண்களை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிலர் சரமாரியாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மோரே பஜார் பகுதியில் பிரச்சனை வெடித்துள்ளது.
இதன் காரணமாக, பாதுகாப்பு படை வீரர்களுக்கும் பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, சந்தைக்கு செல்லும் பாதையை பெண்கள் முடக்கினர். பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையால் ஆத்திரமடைந்த ஒரு குழுவினர், ராணுவ வீரர்கள் பயன்படுத்திய வீடுகளுக்கு தீ வைத்தனர்" எனத் தெரிவித்துள்ளது.
கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மேலும், கலவரத்தின் மத்தியில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சில வீரர்கள் நேரடி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். கும்பலில் இருந்தவர்கள் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி திருப்பிச் சுட்டதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
நேற்று மாலை காங்போக்பி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்திய இரண்டு பேருந்துகளை கும்பல் தீ வைத்து எரித்தது. சபோர்மினா கிராமத்தில் மணிப்பூர் பதிவு எண்களைக் கொண்ட பேருந்துகளை உள்ளூர்வாசிகள் நிறுத்தி, வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என பார்த்தனர். அப்போது, கும்பலில் இருந்த சிலர் பேருந்துகளுக்கு தீ வைத்தனர். ஆனால், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.