Crime: கார் பேனட்டில் தொங்கிய போக்குவரத்து காவலர்..! 19 கி.மீ. தொலைவிற்கு இழுத்துச்சென்ற இளைஞர்..! நடந்தது என்ன?
மும்பையில் கார் பேனட்டில் 19 கி.மீ. போக்குவரத்து போலீசாரை தொங்கவிட்டு இளைஞர் இழுத்துச்சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்ட்ரா தலைநகர் மும்பை. இந்தியாவிலேயே அதிகளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் மும்பை முதன்மையானது ஆகும். இதனால், அங்குள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் எப்போதும் அதிகளவில் காணப்படும். அதை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிக்னலில் நிற்காத கார்:
மும்பையில் உள்ள வஷிநகரத்தில் நேற்றுமுன்தினம் போக்குவரத்து போலீசார் சித்தேஷ்வர் மாலி மற்றும் மற்றொரு போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே வந்த கார் ஒன்று சிவப்பு நிற சிக்னல் இருப்பதை கண்டும் நிற்காமல் முன்னால் வந்து நின்றதுடன், முன்பே நின்றிருந்த காரையும் இடித்தது.
அந்த காரில் இருந்தவர்கள் போக்குவரத்து போலீசார் இருவரையும் கண்டவுடன் காருடன் தப்பியோடினர். இதையடுத்து, மாலியும் மற்றெணாரு போலீசாரும் இணைந்து தப்பியோடியவர்களை பிடிக்க இருசக்கர வாகனத்தில் அவர்களை விரட்டிச் சென்றனர். பின்னர், ஏ.எம்.பி.சி. மார்க்கெட் அருகே அவர்களை மடக்கிப்பிடித்தனர்.
பேனட்டில் தொங்கிச்சென்ற போலீஸ்:
அந்த காரை 23 வயதே ஆன ஆதித்ய பேந்தே என்ற இளைஞர் ஓட்டிவந்துள்ளார். அவரை போலீசார் காரை விட்டு கீழே இறங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அவர் காரை விட்டு கீழே இறங்காமலே இருந்துள்ளார். போக்குவரத்து காவலர் மாலி காரின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் காரை ஓட்டி வந்த ஆதித்ய பேந்தே காரை முன்னால் நின்று கொண்டிருந்த போக்குவரத்து போலீசார் மாலி மீது ஏற்ற முயற்சித்தார்.
தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக மாலி சட்டென்று காரின் பேனட் மீது தாவினார். பேனட் மீது தாவிய மாலி காரின் இருபுறமும் இறுக்கமாக பிடித்துக் கொண்டு கீழே விழாதவாறு பிடித்துக் கொண்டார். ஆனாலும், ஆதித்ய பேந்தே காரை நிறுத்தாமல் நெடுஞ்சாலையில் காரை அதிவேகமாக இயக்கத் தொடங்கினார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக போலீசார் உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சுமார் 19 கிலோ மீட்டர் தொலைவிற்கு கார் பேனட்டில் போக்குவரத்து போலீசார் சித்தேஸ்வரர் மாலி தொங்கியபடியே தன்னை தற்காத்துக் கொண்டு பயணித்துள்ளார். அந்த காரை போலீசார் பின்தொடர்ந்தே சென்றனர். பின்னர். 19 கி.மீ. தொலைவிற்கு பிறகு பால்ம் கடற்கரை சாலையில் போலீசார் அந்த காரை ஒருவழியாக மடக்கிப்பிடித்து நிறுத்தினர்.
போதை வேலையா?
பின்னர், காரில் தொங்கிக்கொண்டிருந்த சித்தேஸ்வரர் மாலி பாதுகாப்பாக கீழே இறங்கினார். மேலும், காரை ஓட்டிவந்த ஆதித்ய பிந்தேவை கைது செய்தனர். அவரை கைது செய்ததுடன் அவரது காரையும் பறிமுதல் செய்தனர். காரை ஓட்டியபோது ஆதித்ய பேந்தே போதை மருந்து ஏதும் உட்கொண்டிருந்தாரா? என்பதற்காக அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
போக்குவரத்து போலீசாரை 19 கி.மீ. சாலையில் காரில் பேனட்டில் தொங்கவிட்டு காரை இளைஞர் ஓட்டிச்சென்ற சம்பவம் மும்பை முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரை ஓட்டிவந்த ஆதித்ய பேந்தே மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 7 AM Headlines: நேற்று நடந்த, இன்னைக்கு நடக்கபோற சமாச்சாரம் என்னன்னு தெரியனுமா..? காலை 7 மணி தலைப்பு செய்திகள் இதோ..!
மேலும் படிக்க: உச்சக்கட்ட பதற்றம்... அத்திக் அகமது கொலை வழக்கை விசாரிக்க விசாரணை ஆணையம்... அடுத்து என்ன?