4 நாட்கள், 300 கிலோமீட்டர்.. மகனுக்கு மருந்து வாங்கச்சென்ற தந்தையின் பயணம்
மகனுக்கு மருந்து வாங்குவதற்காக 300 கி.மீ தூரத்தை சைக்கிளிலேயே கடந்து சென்றிருக்கிறார் தந்தை ஒருவர்
'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே' என்ற பாடல் வரிக்கு சாட்சியாக மகனுக்கு மருந்து வாங்குவதற்காக 300 கி.மீ தூரத்தை சைக்கிளிலேயே கடந்து சென்றிருக்கிறார் தந்தை ஒருவர். கொரோனாவால் பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கர்நாடகா மாநிலமும் அதிலொன்று. இந்நிலையில் மைசூரிலிருந்து 30 கிமீ தூரத்தில் உள்ள டி நரசிபுரா தாலுகாவுக்கு உட்பட்ட கங்கிகனாகொப்பலு கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் (45) தன் மகனுக்கு மாத்திரை வாங்க பெங்களூருவுக்கு 4 நாட்களாக சைக்கிள் பயணமாக சென்றிருக்கிறார்.
கருணாநிதி பிறந்த நாள்; பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
ஆனந்த் தன் மகனுக்கு பெங்களூரு நிம்ஹான்ஸில் ( National Institute on Mental Health and Neuro Sciences) சிகிச்சை பார்த்தார். அப்போதிருந்து அங்குதான் மாத்திரை வாங்கிவருகிறார். மருத்துவர்கள், ஒருநாள் கூட மாத்திரையை நிறுத்தக்கூடாது. நிறுத்தினால் சிக்கல் என எச்சரித்திருக்கிறனர். இதனால், துணிவே துணையாக பயணத்துக்கு ஆயத்தமானார் ஆனந்த். நண்பர்களிடம் இருச்சக்கர வாகனத்தை இரவலாகக்கேட்க அவர்களோ, காவல்துறையினர் வாகனத்தைப் பறிமுதல் செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் தர மறுத்துவிட்டனர். இதனால், ஆனந்த் 300 கி.மீ தூரத்தை 4 நாட்களாக சைக்கிளிலேயே கடந்து சென்றிருக்கிறார். தனது கிராமத்திலிருந்து பன்னூர், மலவல்லி, கனகபுரா வாயிலாக பெங்களூருவுக்குச் சென்றடைந்தார். நிம்மான்ஸ் (NIMHANS) மருத்துவமனை மருத்துவர்கள் அவரது நிலைமையை அறிந்து ரூ.1000 பணம் கொடுத்து அனுப்பியிருக்கின்றனர். மகனுக்காக 4 நாட்கள் 300 கி.மீ சைக்கிள் பயணம் செய்த தந்தையின் செய்தி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
சைக்கிள் பெண்ணின் தந்தை மரணம்..
இது ஒருபுறம் இருக்க, ‘சைக்கிள் பெண்’ என்றழைக்கப்பட்ட ஜோதியின் தந்தை, மாரடைப்பு காரணமாக காலமானார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடு தழுவிய ஊரடங்கு அமலில் இருந்தபோது, டெல்லியில் ரிக்ஷா ஓட்டிக்கொண்டிருந்த மோகன் என்பவர் தனது சொந்த ஊருக்குச் செல்ல முற்பட்டார். அப்போது அவரது 16 வயது மகள் ஜோதி தந்தையை சைக்கிளில் வைத்து ஓட்டிச்சென்றார். 1,100 கி.மீ தூரத்தை 6 நாட்களில் அவர் கடந்தார். தந்தையை சைக்கிளிலேயே சொந்த ஊருக்கு அழைத்துவந்த அவருக்குப் பாராட்டும் உதவித் தொகைகளும் குவிந்தன. அன்றுமுதல் அவர் சைக்கிள் பெண் என்றே அழைக்கப்பட்டார். இந்நிலையில், ஜோதியின் தந்தை மாரடைப்பு காரணமாக காலமானார். ஊரடங்கில் பல நெகிழ்ச்சியான, உருக்கமான சம்பவங்கள் மூலம் மனிதாபிமானம் வெளிப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன என்பதற்கு இந்த இரண்டு சம்பவங்களும் சாட்சி.