(Source: ECI | ABP NEWS)
"தமிழர்களின் சுயமரியாதை" தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கொதித்த கார்கே!
"தமிழ் மக்களின் மரியாதை மற்றும் உரிமைகளை பாஜக அப்பட்டமாக புறக்கணித்துள்ளது" என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு மக்கள் குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவமதிக்கும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், அமைச்சருக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக பேசியுள்ளார். தர்மேந்திர பிரதானின் கருத்துகளை ஏற்று கொள்ள முடியாது என்றும் தமிழர்களின் சுயமரியாதையை அவமதிக்கும் நோக்கில் அவர் பேசி இருப்பதாகவும் கூறி உள்ளார்.
தமிழர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்த கார்கே:
தேசிய கல்வி கொள்கை மூலம் இந்தியை திணக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக திமுக அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. தொகுதி மறுசீரமைப்பு விவகாரமும் தென் மாநிலங்களில் பற்றி எரிந்து வருகிறது. இந்த நிலையில், இந்த இரண்டு விவகாரங்களுக்கு எதிராக நேற்று திமுக எம்.பி.க்கள் குரல் கொடுத்தனர்.
இதற்கு பதிலடி அளித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "இவர்களுக்கு நேர்மை இல்லை. தமிழ்நாடு மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கின்றனர். மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள்" என கூறினார்.
அடிப்படை ஆதாரமற்று, அவமதிக்கும் வகையில் மத்திய அமைச்சர் பேசியதாக திமுக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, தர்மேந்திர பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் தரப்பட்டது. இந்த விவகாரத்தில், தமிழக மக்கள் அவமதிக்கப்பட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையாக சாடினார்.
"சுயமரியாதையை சீண்டியுள்ளனர்"
இந்த நிலையில், தமிழர்களுக்கு ஆதரவாக மாநிலங்களவையில் இன்று பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "நாட்டு மக்களில் ஒரு பகுதியினரின் சுயமரியாதையை சீண்டியுள்ளனர். அவர்களை புண்படுத்தி இருக்கிறார்கள். நாட்டைப் பிரிப்பது பற்றி அவர்கள் பேசுகிறார்கள். நாட்டை உடைப்பது பற்றிப் பேசுகிறார்கள்.
மோடி அரசில் இருக்கும் அந்த அமைச்சர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். பிரதானின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் மக்களின் கண்ணியம் மற்றும் உரிமைகளை அப்பட்டமாக புறக்கணித்துள்ளனர்" என்றார்.
இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு ஆகிய விவகாரங்களில் திமுகவின் குற்றச்சாட்டுகளை மத்திய பாஜக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. கடந்த வாரம் தமிழ்நாட்டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "தொகுதி மறுசீரமைப்பால் நாடாளுமன்றத்தில் ஒரு இடத்தைக் கூட தென் மாநிலங்கள் இழக்காது" என்றார்.
இதையும் படிக்க: கனிமொழி உரிமை மீறல் நோட்டீஸ்.! பேசியதை திரும்ப பெற்ற தர்மேந்திர பிரதான்.! என்ன நடந்தது?





















