Malini Parthasarathy: இந்து குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து மாலினி பார்த்தசாரதி திடீர் விலகல்...காரணத்தை சொல்லி அதிர்ச்சி தந்ததால் பரபரப்பு..!
இந்து குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து மூத்த பத்திரிகையாளர் மாலினி பார்த்தசாரதி இன்று திடீரென விலகியுள்ளார்.
நாட்டின் முன்னணி செய்தி நிறுவனங்களில் ஒன்றாக இந்து உள்ளது. கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. இந்நிலையில், இந்து குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து மூத்த பத்திரிகையாளர் மாலினி பார்த்தசாரதி இன்று திடீரென விலகியுள்ளார். இந்து குழுமத்தின் நிர்வாக குழு உறுப்பினர் பதவியில் இருந்தும் ராஜிநாமா செய்துள்ளார். இது ஊடக உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திடீர் விலகலுக்கு காரணம் என்ன?
தன்னுடைய கருத்துகளுக்கு போதுமான இடம் கிடைக்காததால் நிர்வாக குழுவில் இருந்து விலகி இருப்பதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் அளித்த விளக்கத்தில், "தி இந்து குழுமப் பதிப்பகத்தின் தலைவராக எனது பதவிக்காலம் முடிவடைகிறது.
இருப்பினும், எனது கருத்துகளை தெரிவிப்பதற்கான வாய்ப்பு குறைந்து வருவதால், தி இந்து குழுமப் பதிப்பகத்தின் நிர்வாக குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளேன். குழுமத்தின் தலைவராக, இயக்குனராக, தலையங்க பிரிவின் வியூக வகுப்பாளராக எனது முழு முயற்சியும் தி இந்து குழுமம் நியாயமாகவும் பாரபட்சமற்றும் செய்திகள் வெளியிடும் மரபை மீண்டும் கொண்டு வருவதை உறுதி செய்வதாக இருந்தது.
காரணத்தை போட்டு உடைத்த மாலினி பார்த்தசாரதி:
மேலும் எனது முயற்சிகள் நமது செய்திகளை கருத்தியல் சார்புகளிலிருந்து விடுவிப்பதாக இருந்தது. எனது முயற்சிகளுக்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டதால், நான் இங்கிருந்த செல்ல முடிவு செய்துள்ளேன். இந்த சவாலான பயணத்திற்கு உறுதுணையாக இருந்த எனது நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி" என பதிவிட்டுள்ளார்.
குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து மாலினி பார்த்தசாரதி விலகியிருப்பதால், அதன் அடுத்த தலைவர் யார் என்பது வாசகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. குறிப்பாக, இந்து குழுமத்தின் முன்னாள் தலைவரும் மூத்த பத்திரியாளருமான என். ராம், மீண்டும் தலைவர் பதவியை ஏற்பாரா என்பது கேள்வியாக உள்ளது.
பத்திரிகை துறையில், 30 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்றவர். இந்து நாளிதழ் வளர்ச்சியில், முக்கிய பங்காற்றியவர். கடந்த 2020 ஜூலை மாதம் இந்து நாளிதழ் இயக்குனர்கள் கூட்டத்தில், தலைவராக தேர்வானார். இதை தொடர்ந்து, இன்று பதவி விலகினார்.
சமீபத்தில், செங்கோல் விவகாரத்தில், மத்திய அரசு தெரிவித்த கருத்தை மறுக்கும் விதமாக கட்டுரை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்து தி இந்து நாளிதழ்.