சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு முக்கிய கட்டுப்பாடுகள்! செல்போன் தடை, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்!
சபரிமலை ஐயப்பன் கோவயிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவயிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.
ஜனவரி மாதம் 20-ந் தேதி வரை 65 நாட்கள் நடக்கும் இந்த மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வதற்காக வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் தேவசம்போர்டு வாரியம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
இந்த நிலையில், சபரிமலை சன்னிதானத்தில் இந்த ஆண்டு முதல் கேமரா, செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சபரிமலைக்கு வரும் பக்தர்கள் 18-ம் படிக்கு மேல் சன்னிதானம் பகுதியில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, சன்னிதானம் பகுதியில் செல்போன் பயன்படுத்தவும், புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவும் அனுமதி இல்லை.
இதேபோன்று, சபரிமலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, மாநில சுகாதாரத்துறை பல்வேறு முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேங்கிய நீரில் வாழும் அமீபாவால் மூளை காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளதால், ஐயப்ப பக்தர்கள் நீர்நிலைகளில் குளிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பம்பையில் நீராடும் பக்தர்கள் மூக்கை இரு விரல்களால் அடைத்தபடி நீராட சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
2026 ஆம் ஆண்டு சபரிமலை நடை திறக்கும் தேதி மற்றும் நடை அடைக்கும் தேதி விவரங்களை திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கும் தேதி, மூடும் தேதி விவரங்கள்
| பூஜை | திறக்கும் நாள் | அடைக்கும் நாள் |
| மகரவிளக்கு விழா | 30-12-2025 | 20-1-2026 |
| மகர விளக்கு | 14-1-2026 | - |
| மாசி பூஜை | 12-2-2026 | 17-2-2026 |
| பங்குனி பூஜை | 14-3-2026 | 19-3-2026 |
| பங்குனி உத்திர திருவிழா | 22-3-2026 | 1-4-2026 |
| பங்குனி உத்திர கொடியேற்றம் | 23-3-2026 | - |
| பங்குனி உத்திரம் ஆராட்டு | 1-4-2026 | - |
| சித்திரை பூஜை | 11-4-2026 | 18-4-2026 |
| சித்திரை விஷூ | 15-4-2026 | - |
| வைகாசி பூஜை | 14-5-2026 | 19-5-2026 |
| பிரதிஷ்டை தின விழா | 25-5-2026 | 26-5-2026 |
| ஆனி பூஜை | 14-6-2026 | 19-6-2026 |
| ஆடி பூஜை | 16-7-2026 | 21-7-2026 |
| ஆவணி பூஜை | 16-8-2026 | 21-8-2026 |
| திருவோண பூஜை | 24-8-2026 | 28-8-2026 |
| புரட்டாசி பூஜை | 16-9-2026 | 21-9-2026 |
| ஐப்பசி பூஜை | 17-10-2026 | 22-10-2026 |
| சித்திரை ஆட்ட திருநாள் | 6-11-2026 | 7-11-2026 |
| மண்டல கால பூஜை | 16-11-2026 | 27-11-2026 |
| மண்டல பூஜை | 27-12-2026 | - |
| அடுத்த மகரவிளக்கு கால பூஜை | 30-12-2026 | - |
| அடுத்த மகர விளக்கு | 14-1-2027 | - |





















