மணிப்பூர் பழங்குடி பெண்கள் விவகாரம்..வீடியோவில் இருந்த நபரை தட்டி தூக்கிய போலீஸ்
வெளியான வீடியோவில், பழங்குடி பெண்ணை பிடித்து இழுத்து செல்லும் பச்சை நிற டி ஷர்ட்டை அணிந்தவர்தான் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
மணிப்பூர் பழங்குடி பெண்கள் விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், குகி சமூக பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்றவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முக்கிய குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ்:
வெளியான வீடியோவில், பழங்குடி பெண்ணை பிடித்து இழுத்து செல்லும் பச்சை நிற டி ஷர்ட்டை அணிந்தவர்தான் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலையில் நடந்த தேடுதல் வேட்டையில் காவல்துறை கைது நடவடிக்கையை எடுத்துள்ளது. முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இவரின் பெயர் ஹ்யூரெம் ஹெரோடாஸ் மெய்தீ என அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மெய்தி மற்றும் குக்கி சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக வெடித்து கலவரங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதுதொடர்பாக எதிர்கட்சிகள் தொடர்ந்து பேசி வந்தாலும், மத்தியிலும், மணிப்பூரிலும் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக அங்கு நிலமை சீரடைந்து வருவதாக தொடர்ந்து பேசி வந்தது.
இதற்கிடையே, மணிப்பூர் கலவரத்தின் உச்சபட்சமாக, 20 வயதுக்கு மேற்பட்ட ஒரு இளம்பெண் மற்றும் 40 வயதை கடந்த ஒரு பெண் என இருவரும் பட்டப்பகலில் சாலையில் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோவில், சிலர் அந்த பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அந்த இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை:
சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான புகாரில், “கங்போக்பி மாவட்டத்தில் உள்ள தங்களது கிராமம் வன்முறையாளர்களால் தாக்கப்பட்டு பிறகு, பாதுகாப்பு கருதி காட்டுக்குள் தப்பி ஓடினோம்.
தவுபல் காவல்துறையினரால் மீட்கப்பட்ட அவர்கள், காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர். அப்போது. காவல் நிலையத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் காவல்துறையினர் வாகனத்தை தடுத்து நிறுத்திய கலவரக்காரர்கள், அந்த பெண்களை தூக்கிச் சென்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்ட உச்ச நீதிமன்றம், முக்கியத்துவம் வாய்ந்த கருத்தை தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற விசாரணையின்போது இந்த சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய டி. ஒய். சந்திரசூட், "இதை ஏற்று கொள்ளவே முடியாது. வகுப்புவாத கலவரம் நடக்கும் பகுதியில் பெண்களை வன்முறைக்கான கருவிகளாக பயன்படுத்தியிருக்கிறார்கள். அரசியலமைப்பு முற்றிலும் தோல்வி அடைந்ததற்கு இதுவே சாட்சி.
வெளிவரும் காணொளிகளால் நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். அரசு செயல்படவில்லை என்றால், நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" என டி. ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.