Maharashtra New Governor: சர்ச்சையில் சிக்கிய பகத்சிங் கோஷ்யாரி ராஜினாமா ஏற்பு..! மகாராஷ்ட்ரா புதிய ஆளுநராக ரமேஷ் பைஸ் நியமனம்..!
மகாராஷ்ட்ரா மாநில ஆளுநராக, ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த ரமேஷ் பைஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்ட்ரா மாநில ஆளுநராக, ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த ரமேஷ் பைஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பகத்சிங் கோஷ்யாரி:
சமீபத்தில் மகாராஷ்ட்ரா மாநில ஆளுநராக பதவி வகித்து வந்த பகத்சிங் கோஷ்யாரி தனது பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக கூறியிருந்தார். இவர் மகாராஷ்ட்ராவில் 22வது ஆளுநராக கடந்த 2019 ஆம் ஆண்டு பதவியேற்றார். பதவி வகித்த காலத்தில் பல சர்ச்சைகளில் அவர் சிக்கினார்.
குறிப்பாக, 2019 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாத சூழலிலும், பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஆகியோரை அழைத்து அதிகாலையில் முதலமைச்சராகவும் துணை முதலமைச்சராகவும் பதவி பிரமாணம் செய்து வைத்தவர் பகத் சிங் கோஷ்யாரி.
அடுத்தடுத்து சர்ச்சை:
தொடர்ந்து சமூக சீர்திருத்தவாதிகளான சாவித்ரிபாய் பூலே, ஜோதிபா பூலே ஆகியோருக்கு எதிராக சர்ச்சை கருத்துகளை தெரிவித்தார். காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி நடத்தியபோது அரசு 12 பேரை சட்ட மேலவை உறுப்பினர்களாக பரிந்துரைத்தது. ஆனால் அதனை ஏற்காமல் கால தாமதம் செய்தது பெரும் புயலை கிளப்பியது.
Ramesh Bais appointed as Maharashtra Governor after President Murmu accepts resignation of Bhagat Singh Koshyari
— ANI Digital (@ani_digital) February 12, 2023
Read @ANI Story | https://t.co/FNZnO5gPbV#PresidentMurmu #Governor #RameshBais #bhagatsinghkoshyari pic.twitter.com/873RVJUyFI
இதனையடுத்து சத்ரபதி சிவாஜிக்கு எதிராக அவர் கருத்து தெரிவித்தது மாநில அளவில் போராட்டத்திற்கு வழிவகுத்தது. இதனைத் தொடர்ந்தே ஆளுநர் பதவியில் இருந்து விலக பகத் சிங் கோஷ்யாரி விருப்பம் தெரிவித்தார்.
புதிய ஆளுநர்:
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ஆளுநர் கோஷ்யாரி தனது வாழ்நாள் முழுவதையும் வாசிப்பு, எழுதுதல் மற்றும் பிற நிதானமான செயல்களில் செலவிட விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் புனிதர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் வீரம் மிக்க போராளிகளின் பூமியாக உள்ள மகாராஷ்டிராவில் பணியாற்றுவது தனக்கு பெருமை எனவும் அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தனது ராஜினாமா கடிதத்தை பகத் சிங் கோஷ்யாரி அளித்திருந்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பகத் சிங் கோஷ்யாரிக்கு பதிலாக மகாராஷ்ட்ரா மாநில ஆளுநராக, ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த ரமேஷ் பைஸை நியமனம் செய்துள்ளார்.