பதவியை ராஜினாமா செய்கிறாரா ஆளுநர்..? பிரதமர் மோடியிடம் கோரிக்கை - நடந்தது என்ன?
சத்ரபதி சிவாஜி தொடர்பான சர்ச்சை பேச்சைத் தொடர்ந்து ஆளுநர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளார் மகாராஷ்ட்ரா பகத்சிங் கோஷ்யாரி.
மகாராஷ்ட்ராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஆளுநர் ராஜினாமாவா?
மகாராஷ்டிரா ஆளுநராக பதவி வகிப்பவர் பகத்சிங் கோஷ்யாரி. கடந்தாண்டு முழுவதும் இவர் எதிர்கட்சிகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். இந்நிலையில், ஆளுநர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளார் பகத் சிங கோஷ்யாரி. இந்த முடிவை பிரதமர் மோடியிடம் தெரிவித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ராஜ் பவன் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆளுநர் கோஷ்யாரி தனது வாழ்நாள் முழுவதையும் வாசிப்பு, எழுதுதல் மற்றும் பிற நிதானமான செயல்களில் செலவிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
புனிதர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் வீரம் மிக்க போராளிகளின் பூமியாக உள்ள மகாராஷ்டிரா போன்ற ஒரு பெரிய மாநிலத்தின் ராஜ்ய சேவக் அல்லது ராஜ்யபாலாக (ஆளுநர்) பணியாற்றுவது எனக்கு கவுரவம். பாக்கியம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில், மகாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கு பிரதமர் மோடி சென்றிருந்த நிலையில், ஆளுநர் பதவியில் இருந்து விலக பகத் சிங் கோஷ்யாரி விருப்பம் தெரிவித்திருப்பது முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மும்பை மாநகராட்சி தேர்தல் நடைபெறும் சமயத்தில் இந்த திருப்பம் நிகழ்ந்துள்ளது.
சர்ச்சை மேல் சர்ச்சை
ஆளுநராக பகத் சிங் கோஷ்யாரி பதவி வகித்த காலத்தில் பல சர்ச்சைகளில் அவர் சிக்கியுள்ளார். குறிப்பாக, 2019ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாத சூழலிலும், பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஆகியோரை அழைத்து அதிகாலையில் முதலமைச்சராகவும் துணை முதலமைச்சராகவும் பதவி பிரமாணம் செய்து வைத்தவர் பகத் சிங் கோஷ்யாரி.
அதேபோல, சமூக சீர்திருத்தவாதிகளான சாவித்ரிபாய் பூலே, ஜோதிபா பூலே ஆகியோருக்கு எதிராக சர்ச்சை கருத்து தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி நடத்தியபோது, 12 பேரை சட்ட மேலவை உறுப்பினர்களை அந்த அரசாங்கம் பரிந்துரை செய்தது. ஆனால், அதை ஏற்காமல் ஆளுநர் காலதாமதம் செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
I can never forget the love and affection I have received from the people of Maharashtra during the last little more than 3 years.
— Governor of Maharashtra (@maha_governor) January 23, 2023
மேலும், சத்ரபதி சிவாஜி மகாராஜாவுக்கு எதிராக அவர் கருத்து தெரிவித்தது மாநில அளவில் போராட்டத்திற்கு வழிவகுத்தது. அவரை எதிர்த்து மகாராஷ்டிரா முழுவதும் நடந்த போராட்டங்கள் அரசியலில் புயலை கிளப்பியது.