Uddhav Thackeray Resigns: 'எதிர்பாராமல் அதிகாரத்திற்கு வந்தேன்... இப்போது அதேபோல் வெளியேறுகிறேன்' - உருக்கமாக ராஜினாமா செய்த உத்தவ்!
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான வழக்கில் தோல்வி அடைந்த நிலையில், மகாராஷ்டிர முதலமைச்சர் பொறுப்பை உத்தவ் தாக்கரே ராஜிநாமா செய்துள்ளார்.
மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே புதன்கிழமை அன்று ராஜிநாமா செய்துள்ளார். நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவசேனா தலைமையிலான அரசு பெரும்பான்மை இருப்பதை நிரூபிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட ஒரு சில நொடிகளிலேயே, அவர் பதவியிலிருந்து விலகி உள்ளார்.
"I am resigning as the Chief Minister," Maharashtra CM Uddhav Thackeray announces pic.twitter.com/RBDWHzchYx
— ANI (@ANI) June 29, 2022
பேஸ்புக் லைவ் மூலமாக அவர் மக்களுக்கு ஆற்றிய உரையில், "உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கிறோம். ஜனநாயகம் பின்பற்றப்பட வேண்டும். நான் எதிர்பாராத விதமாக அதிகாரத்திற்கு வந்திருந்தேன். அதே பாணியில் வெளியே செல்கிறேன். நான் நிரந்தரமாக செல்ல மாட்டேன். இங்கேயே இருப்பேன். மீண்டும் சிவசேனா பவனில் அமர்வேன். நான் என் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவேன். நான் முதலமைச்சர் பதவியையும், எம்எல்சி பதவியையும் ராஜினாமா செய்கிறேன்" என்றார்.
இதையடுத்து, ஆளுநர் மாளிகைக்கு சென்று தனது ராஜிநாமா கடிதத்தை சமர்பித்தார். உத்தவ் தாக்கரேவுக்கு தற்போது 15 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. முன்னதாக, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க கோரி சிவசேனா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
I am also resigning as a member of Maharashtra Legislative Council: Uddhav Thackeray
— Press Trust of India (@PTI_News) June 29, 2022
வழக்கை நீதிபதிகள் சூர்யகாந்த், ஜெ.பி. பரிதிவாலா ஆகியோர் கொண்ட விடுமுறை கால அமர்வு, "நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக நாளை நடைபெறவுள்ள மகாராஷ்டிர சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்திற்கு தடை விதிக்க போதுமான காரணங்களை எங்களால் ஏற்க முடியவில்லை.
மகாராஷ்டிர சட்டப்பேரவை சிறப்பு அமர்வு ஜூன் 28ஆம் தேதியிட்ட ஆளுநர் உத்தரவில் உள்ள வழிமுறைகளின்படி நடத்தப்படும்" என்றார்கள்.
இருப்பினும், நம்பிக்கை வாக்கெடுப்பில் வரும் முடிவு ஜூலை 11ஆம் தேதி வெளியிடப்படும் தீர்ப்புக்கு உட்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. சிவசேனாவைச் சேர்ந்த எம்எல்ஏக்களில் ஒரு பகுதியினர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டுமா என்பதை உச்ச நீதிமன்றம் அன்று முடிவு செய்யும்.
சிவசேனாவின் மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அவரது சொந்தக் கட்சியைச் சேர்ந்த 39 எம்எல்ஏக்கள் அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளனர்.