‛ப்ரி-பயர்’ விளையாடி ரூ.40 ஆயிரம் இழப்பு; தற்கொலை செய்த சிறுவன்!
மத்திய பிரதேசத்தில் ப்ரி-பயர் ஆன்லைன் விளையாட்டினால் ரூபாய் 40 ஆயிரம் பறிபோனதால், 13 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது சதர்பூர் மாவட்டம். இந்த மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயதான சிறுவன் கிருஷ்ணா. அவரது தந்தை அந்த மாவட்டத்தின் மாவட்ட மருத்துவமனையில் ஆய்வகம் ஒன்றை நடத்தி வருகிறார். கிருஷ்ணாவின் தாயாரும் மாநில சுகாதாரத்துறையிவன் கீழ் செவிலியராக மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருகிறார். 13 வயதான சிறுவன் கிருஷ்ணா அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறான்.
கடந்தாண்டு கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால், மத்திய பிரதேசத்தில் பள்ளிகள் மூடப்பட்டது. அந்த மாநிலத்தில் பெரும்பாலான பள்ளிகளில் இணையவழி வகுப்புகள் நடத்தப்பட்டது. கிருஷ்ணாவின் பெற்றோரும் இணையவழி வகுப்பிற்காக கிருஷ்ணாவிற்கு செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர்.
இணையவழி வகுப்புகள் மட்டுமின்றி, செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடுவதிலும் சிறுவன் கிருஷ்ணா ஆர்வமாக காணப்பட்டுள்ளான். ப்ரி பயர் எனப்படும் ஆன்லைன் விளையாட்டில் செல்போனில் ஆர்வமாக விளையாடி வந்த கிருஷ்ணா ஒரு கட்டத்தில் அந்த விளையாட்டிற்கு மிகவும் அடிமையாக மாறிவிட்டான். இதனால், அந்த விளையாட்டிற்கு செல்போன் மூலமாக பணம் கட்டி விளையாடும் அளவிற்கு சிறுவன் கிருஷ்ணா சென்றுள்ளான்.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை கிருஷ்ணாவின் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது, கிருஷ்ணாவின் தாயாரின் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், ரூபாய் அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூபாய் 1,500 எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனால், கோபமடைந்த கிருஷ்ணாவின் தாயார் ஆன்லைன் விளையாட்டிற்காக பணத்தை செலவழிப்பதற்காக சிறுவன் கிருஷ்ணாவை தொலைபேசியிலே கடுமையாக திட்டியுள்ளார். தாயார் திட்டியதால் சிறுவன் கிருஷ்ணா மனமுடைந்துள்ளான். உடனே தனது அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டுள்ளான். நீண்ட நேரமாகியும் அறையை விட்டு கிருஷ்ணா வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவனது அக்கா, கிருஷ்ணாவை அழைத்துள்ளார். நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் அக்கம்பக்கத்தினருக்கு கிருஷ்ணாவின் அக்கா தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உள்ளே கிருஷ்ணா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளான். இதனால், பதறிப்போன கிருஷ்ணாவின் அக்காவும், அக்கம்பக்கத்தினரும் அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே சிறுவன் கிருஷ்ணாவை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், கிருஷ்ணாவை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
சிறுவன் கிருஷ்ணா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது தாயாருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா. நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன். நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். அதனால், என்னை நானே சாகடித்துக்கொள்கிறேன். மீண்டும் ஒரு முறை என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா. ப்ரிபயர் ஆன்லைன் விளையாட்டிற்காக ரூபாய் 40 ஆயிரத்தை செலவிட்டு விட்டேன். அழுக வேண்டாம் அம்மா” இவ்வாறு ஆங்கிலத்திலும், இந்தியிலும் எழுதப்பட்டுள்ளது. ப்ரி-பயர் விளையாட்டால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோன்று, கடந்த ஜனவரி மாதம் மத்திய பிரதேசத்தின் சாஹர் மாவட்டத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் ப்ரி-பயர் விளையாடுவதற்கு தனது தந்தை செல்போன் தராததால் தற்கொலை செய்து கொண்டான் என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரி-பயர் ஆன்லைன் விளையாட்டால் பல்வேறு சிறுவர்களும், பல்வேறு இளைஞர்களும் அடிமையாக இருப்பதால் அந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.