Crime: மனைவியை கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்த கொடூர கணவன்..மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி!
செஹோர் மகளிர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்ட கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்கள், தலித்கள், சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த மக்கள் மீது நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வந்துள்ளது. சமீபத்தில் கூட, மத்திய பிரதேசத்தில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஒருவர் மீது பாஜக நிர்வாகி சிறுநீர் கழித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
மத்திய பிரதேசத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி:
அதன் தொடர்ச்சியாக, ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் பழங்குடி இளைஞர், சிறுமி ஒருவரை காதலித்த காரணத்தால் ஆறு இளைஞர்கள் சேர்ந்து அவர் மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் மத்திய பிரதேசத்தில் மற்றுமொரு சம்பவம் நடந்துள்ளது.
செஹோர் மாவட்டத்தில் பெண் ஒருவர், தன் கணவர் தன்னை வற்புறுத்தி சிறுநீர் குடிக்க வைத்ததாக புகார் அளித்துள்ளார். அதுமட்டும் இன்றி, தன்னை தாக்கியதாகவும் கணவர் மீது குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செஹோர் மகளிர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்ட கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனைவியை கட்டாயப்படுத்தி கணவன் செய்த காரியம்:
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், "என்னை என் கணவர் தாக்கி அவரின் சிறுநீரை குடிக்க வைத்தார். எனக்கு நீதி வேண்டும். கடந்த காலத்திலும் பல கஷ்டங்களை அனுபவித்துள்ளேன். ஒரு முறை என் மீது கேரோசின் ஊற்றி என் கணவர் எரிக்க பார்த்தார். ஆனால், அந்த சமயத்தில் நான் புகார் அளிக்கவில்லை.
இதுநாள்வரை, நான் இதை யாரிடமும் சொல்லவில்லை. ஆனால், தற்போது நடந்துள்ள சம்பவம் சுயமரியாதையை பாதித்துள்ளது. என் புகாரை யாரும் கேட்கவில்லை என்றால் முதலமைச்சரிடம் புகார் அளிப்பேன். அவரிடம் நீதி கேட்பேன்" என்றார்.
இதுகுறித்து மகளிர் காவல்நிலையத்தின் பொறுப்பு அதிகாரி பூஜா ராஜ்புத் கூறுகையில், "தன்னை தன் கணவர் தாக்கி, அதை வீடியோவாக எடுத்துள்ளதாக அந்த பெண் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனை சட்டம் 498A, 324, 323, 294, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட, குற்றம்சாட்டப்பட்ட கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.
சமீப காலமாக, குடும்ப வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மனைவியை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொள்ளும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.