எம்பிக்களுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி.. சதம் விளாசி அசத்திய அனுராக் தாக்கூர்!
எம்பிக்களுக்கு இடையே நடத்தப்பட்ட டி20 கிரிக்கெட் போட்டியில் மக்களவை சபாநாயகர் லெவன் அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
'காசநோய் இல்லாத பாரதம்' மற்றும் 'போதையில்லா பாரதம்' பிரச்சாரங்களை மக்கள் இயக்கமாக மாற்றி, 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை காசநோயிலிருந்து விடுவிக்க தங்களுக்குள் ஆரோக்கியமான போட்டியின் உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய விளையாட்டரங்கில் இன்று 'காசநோய் இல்லாத பாரதம் ' மற்றும் ' போதையில்லா பாரதம்' பிரச்சாரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையேயான நட்பு ரீதியான கிரிக்கெட் போட்டியைத் தொடங்கி வைத்துப் பேசிய மக்களவை சபாநாயகர் பிர்லா, காசநோய் மற்றும் போதைப் பழக்கத்திற்கு எதிரான நமது போராட்டத்தின் வெற்றிக்கு வெகுஜன விழிப்புணர்வு மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு ஆகியவை முக்கியமானவை என்று கூறினார்.
ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க காசநோய் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாதலை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த அவர், அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் காசநோய் இல்லாதவையாக மாற்ற போட்டி உணர்வை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.
2030 ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க உலகளாவிய இலக்கை உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ளது. ஆனால், பிரதமர் மோடியின் கீழ், 2025ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க பெரிய லட்சிய இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த இலக்கை அடைவதற்கு, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என்றும், அவர்கள் நாடாளுமன்றத்தில் இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் பிர்லா கூறினார்.
2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியா காசநோய் இல்லாத நாடாக மாறுவதை உறுதி செய்ய உறுதியுடன் பணியாற்றுமாறு அவர்களை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தினார்.
இமாச்சலப் பிரதேசத்தின் ஹமீர்பூரைச் சேர்ந்த எம்.பி. அனுராக் சிங் தாக்கூரின் முயற்சியால் இந்தியாவை காசநோய் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாதல் இல்லாத நாடாக மாற்றுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 20 ஓவர் நட்பு ரீதியான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.
மக்களவை சபாநாயகர் லெவன் அணிக்கு அனுராக் சிங் தாக்கூர் தலைமை தாங்கினார். மாநிலங்களவை தலைவர் லெவன் அணிக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமை தாங்கினார். மக்களவை தலைவர் லெவன் அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 111 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்த அனுராக் சிங் தாக்கூர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.