களைகட்டும் வயநாடு! ராகுல் காந்திக்கு எதிராக களமிறங்குகிறாரா டி. ராஜாவின் மனைவி?
வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் அன்னி ராஜா களமிறங்குகிறார்.
அடுத்த மாத இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்திலோ மக்களவை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முயற்சி செய்து வரும் நிலையில், பாஜகவின் கனவை தவிடுபொடி ஆக்க எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணி களமிறங்கியுள்ளது.
இறங்கி அடிக்கும் I.N.D.I.A கூட்டணி:
பல்வேறு மாநிலங்களில் I.N.D.I.A கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம், டெல்லி, குஜராத், ஹரியானா, கோவா, சண்டிகர் ஆகிய மாநிலங்களில் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், பஞ்சாப், கேரள மாநிலங்களில் I.N.D.I.A கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள், தனித்தே களம் இறங்க உள்ளது.
கேரளாவை பொறுத்தவரையில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளே பிரதான அரசியல் கட்சிகளாக உள்ளன. இரண்டு கட்சிகளும் தங்கள் தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதும், அரசாங்கத்தை அமைப்பதும் வாடிக்கையாகிவிட்டது. கடந்த கால தேர்தல்களை போல, இந்த முறையும் தனித்தனியே கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய ஜனநாயக முன்னணியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையில் இடது ஜனநாயக முன்னணியும் களம் இறங்குகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு, யாரும் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, உத்தர பிரதேசத்தில் உள்ள அமேதியுடன் சேர்ந்து கேரளாவில் உள்ள வயநாட்டிலும் போட்டியிட்டார்.
வயநாட்டில் களமிறங்கும் டி. ராஜாவின் மனைவி:
அமேதி தொகுதியில் தோல்வி அடைந்தாலும் வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றிபெற்றார். எனவே, கடந்த முறை போல், இந்த முறையும் வடநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இடது ஜனநாயக முன்னணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 மக்களவை தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி, திருவனந்தபுரம், வயநாடு தொகுதிகளில் மூத்த தலைவர்களை களம் இறக்கியுள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இதில், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் அன்னி ராஜா களமிறங்குகிறார்.
இவர் வேறு யாரும் அல்ல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜாவின் மனைவியே ஆவர். வயநாட்டில் ராகுல் காந்தி களம் இறங்கும் பட்சத்தில் அன்னி ராஜாவின் முதல் தேர்தலே சவால் மிக்கதாக அமையும் என கருதப்படுகிறது.
திருவனந்தபுரத்தில் மூத்த தலைவர் பன்னியன் ரவீந்திரனும் திருச்சூர் தொகுதியில் முன்னாள் வேளாண்துறை அமைச்சர் வி.எஸ். சுனில் குமாரும் மாவேலிக்கரையில் சி. ஏ. அருண்குமாரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர்.