‛லிவ் இன்’ உறவில் சமூக பார்வையை திணிக்கக் கூடாது: - உயர் நீதிமன்றம் கருத்து!
லிவ் இன் உறவுகள் தனிநபர் சார்ந்தது. அதை இரு தனிநபர்களின் சுதந்திரம் சார்ந்தே பார்க்க வேண்டும். அதில் சமூகப் பார்வையை திணிக்கக் கூடாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
லிவ் இன் உறவுகள் தனிநபர் சார்ந்தது. அதை இரு தனிநபர்களின் சுதந்திரம் சார்ந்தே பார்க்க வேண்டும். அதில் சமூகப் பார்வையை திணிக்கக் கூடாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் ப்ரீதின்கர் திவாகர், அசுதோஷ் ஸ்ரீவஸ்தவா அடங்கிய அமர்வு இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது. இருவெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இரு ஜோடிகள் லிவ் இன் உறவில் இருக்க பெண்ணின் வீட்டார் இடையூறு செய்வதாக நீதிமன்றத்தை நாடினர்.
முன்னதாக இரு தரப்பினரும் காவல்துறையை நாடியுள்ளனர். காவல்துறை சார்பில் எவ்வித உதவியும் செய்யப்படாத நிலையில் அந்த ஜோடி நீதிமன்றத்தை நாடின.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "அரசியல் சாசன சட்டப் பிரிவு 21 தனிநபர் சுதந்திரம் வழங்கியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் லிவ் இன் உறவுகள் என்பது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. அத்தகைய உறவை தனிநபரைச் சார்ந்து தனிநபரின் உரிமைக்கு உட்படுத்தியே பார்க்க வேண்டுமே தவிர அதனை சமூகத்தின் பார்வையில் பார்க்கக் கூடாது. சமூகம் கலாச்சாரக் காவல் பார்வையில் இவ்விவகாரத்தை அணுகக் கூடாது" என்று தெரிவித்தனர்.
அண்மையில் இதே போன்றதொரு வழக்கு பஞ்சாப் நீதிமன்றத்திலும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் "ஒவ்வொரு தனிமனிதனும் அவரது விருப்பப்படி அவரது துணையுடன் திருமணம் செய்து கொண்டு சட்டமுறைப்படி வாழ்வதும் அல்லது லிவ் இன் உறவில் வாழ்வதும் அவரவர் உரிமை. இந்த முடிவில் அவரது குடும்பத்தினர் கூட தலையிட முடியாது. உச்ச நீதிமன்றமே இதனை அங்கீகரித்துள்ளது.
இந்தியாவில் இந்த உறவில் எந்தவித சட்ட ரீதியிலான தடையும் இல்லை. அதனால் இந்த உறவில் இருப்பவர்களுக்கு, எல்லோருக்கும் இருப்பது போலவே சம அளவிலான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். இந்தியாவில் இந்த உறவுமுறை இப்போது பெருநகரங்களையும் கடந்தும் பிரபலம் அடைந்து வருகிறது" என்று தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
உறவு கழுத்தை நெறிக்கக் கூடாது..
லிவ் இன் உறவு, மறு மணம் இவை எல்லாமே வரவேற்கக் கூடியவை தான். ஆனால் அதிலும் தனிநபர் சுதந்திரம் பறி போகாமல், யாரும் யாரையும் அடிமைப்படுத்தாமல் இருக்க வேண்டும். இருவரும் பரஸ்பரம் புரிந்து கொண்டு அன்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பரஸ்பரம் நட்பு பாராட்டும் உறவாக இருந்தால் அது வரவேற்கத்தக்கது. ஆனால், அதன் சாராம்சத்தைப் புரிந்து கொள்ளாமல் அரைவேக்காட்டுத் தனத்தோடு அணுகி, உடல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்ளும் உறவாக மட்டுமோ அல்லது ஒருவர் மற்றொருவரை ஏதாவது ஒரு வகையில் சுரண்டும் உறவாகவோ இருந்தால் அது ஆரம்பத்திலேயே துண்டிக்கப்பட வேண்டியதோ.
ஆணோ, பெண்ணோ பிறக்கும் போது தனியாகத் தான் பிறக்கிறோம். துணையோடு தான் வாழ வேண்டும் என்ற அவசியமோ நிர்பந்தமோ இல்லை. ஆனால் துணையை அமைத்துக் கொள்ளும்போது அது பெயரளவில் இல்லாமல் உண்மையான உற்ற துணையாக இருப்பதை உறுதி செய்து கொண்டால் உறவு இனிக்கும்.