Crime: கொலை...கொள்ளை...பயங்கரவாதம்..! மோஸ்ட் வான்டட் தீவிரவாதி மர்ம மரணம்...! என்ன நடந்தது..?
கடந்த 2008ம் ஆண்டு, டர்ன் தரனில் தனிப்பட்ட பகை காரணமாக ஒருவரை கொலை செய்ததன் மூலம் குற்ற உலகுக்கு அவர் அறிமுகம் ஆனார்.
பஞ்சாப் காவல்துறையின் உளவுத்துறை தலைமையகத்தில் கடந்த மே மாதம் ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் உள்பட பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் தொடர்புடையவர் காலிஸ்தானி தீவிரவாதியான ஹர்விந்தர் சிங் ரிண்டா.
இவர், பாகிஸ்தானில் சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மரணத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றாலும், அவர் லாகூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
காலிஸ்தான்:
தடைசெய்யப்பட்ட காலிஸ்தானி அமைப்பான பாபர் கல்சா இன்டர்நேஷனலில் உறுப்பினராக இருந்துள்ளார் ஹர்விந்தர் சிங். பஞ்சாபில் தேசவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளூர் கும்பல்களின் உதவியைப் பெற்று பாகிஸ்தானில் வசித்து வந்ததாக நம்பப்பட்டு வந்தது.
இந்த ஆண்டு மே மாதம் மொஹாலியில் உள்ள பஞ்சாப் போலீஸ் உளவுத்துறை தலைமையகத்தில் ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டு (RPG) தாக்குதல் வழக்கில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. அதே மாதத்தில், ஹரியானாவில் வாகனத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கிலும் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Pakistan-based Khalistani terrorist Harvinder Singh Rinda died in Lahore
— Anshul Saxena (@AskAnshul) November 20, 2022
1. He was involved in various terror cases & targeted killings in India
2. He was involved in smuggling of drugs & weapons
3. He was backed by Pak's ISI. He used to recruit radicals for Khalistan movement pic.twitter.com/EAVPmkjH7n
கடந்த நவம்பரில் நவன்ஷஹரில் உள்ள குற்றப் புலனாய்வு முகமை அலுவலகத்தில் கையெறி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் இவர் ஈடுபட்டிருப்பது பின்னர் கண்டறியப்பட்டது. குண்டர்கள் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுக்களுக்கு இடையேயான முக்கிய இணைப்பாக ஹர்விந்தர் சிங் கருதப்படுகிறார்.
மோஸ்ட் வாண்டட் தீவிரவாதி:
போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை எல்லை தாண்டி கடத்தி சென்றதில் அவருக்கு தொடர்பு இருப்பதால் தேசிய பாதுகாப்புக்கு அவரால் அச்சுறுத்தல் இருப்பதாக விசாரணை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றன.
பஞ்சாபில் "மோஸ்ட் வாண்டட் 'ஏ' பிளஸ் பிரிவு" குண்டராக அவர் கருதப்படுகிறார். மகாராஷ்டிரா, சண்டிகர், ஹரியானா மற்றும் மேற்கு வங்கம் போன்ற பல இடங்களில் காவல்துறையால் தேடப்பட்டு வருகிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாபில் உள்ள டர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள சர்ஹாலி கிராமத்தில் இருந்து மகாராஷ்டிராவில் உள்ள நாந்தேடுக்கு அவர் குடிபெயர்ந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
கடந்த 2008ஆம் ஆண்டு, டர்ன் தரனில் தனிப்பட்ட பகை காரணமாக ஒருவரை கொலை செய்ததன் மூலம் குற்ற உலகுக்கு அவர் அறிமுகம் ஆனார். சண்டிகரில் பட்டப்பகலில் ஹோஷியார்பூர் பஞ்சாயத்து தலைவரை ஹர்விந்தர் சிங் கொலை செய்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தனது கும்பலுடன் சேர்ந்து கொலை, கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்து அவர் தலைமறைவாக இருந்து வந்தார்.