Sabarimala : சபரிமலைக்கு போறீங்களா? - 8ஆம் தேதிவரை முன்பதிவு செய்ய முடியாது...! காரணம் என்ன?
புத்தாண்டு தினத்தையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
சபரிமலை
கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு கடந்த மாதம் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அன்றைய தினம் முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபட்டனர். அதனை தொடர்ந்து திரளான பக்தர்கள் கூட்டம் ஐயப்பனை தரிசித்த வண்ணம் உள்ளனர். கேரளா தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி, மற்றும் வட இந்தியாவில் இருந்து வந்து ஐயப்பனை தரிசித்து செல்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து கூட பக்தர்கள் வருகின்றனர்.
கொரோனா தொற்றுக்குப் பின் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முழுவதுமாக தளர்த்தப்பட்டுள்ளதால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தரிசனம் செய்யும் பக்தர்களை உடனடியாக சன்னிதானம் பகுதியில் இருந்து வெளியேற்ற காவல்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நாள்தோறும் 90 ஆயிரம் வரை பக்தர்கள் தரிசனம் செய்து வருவதாக கூறப்படும் நிலையில் ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு நடைமுறை பின்பற்றப்படுகிறது
சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு ஒரு மண்டலம் (41 நாட்கள்) நிறைவடைந்ததை ஒட்டி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கும் பூஜை நடைபெற்றது. கடந்த மாதம் 27-ஆம் தேதியுடன் மண்டல சீசன் நிறைவடைந்தது. மகர விளக்கு பூஜைக்காக 30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அன்றைய தினம் 23 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
1 லட்சம் பக்தர்கள் தரிசனம்
இந்நிலையில், நேற்று ஆங்கில புத்தாண்டு அன்று திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முன்பதிவு செய்த 90 ஆயிரம் பக்தர்கள்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து அய்யப்பனை தரிசனம் செய்தனர். இதுபோக உடனடி முன்பதிவு மூலமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அன்றைய நாளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
8-ஆம் தேதி முன்பதிவு நிறைவு
சபரிமலையில் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பக்தர்களை அனுமதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜையானது வரும் 14-ஆம் தேதி நடைபெறுகிறது. மேலும் 19-ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகிறார்கள். இதில் 8-ஆம் தேதி வரை தினமும் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய முன்பதிவு செய்து உள்ளனர். இதனால் அன்றைய நாட்களில் தரிசனம் செய்ய முன்பதிவு செய்ய முடியாது.
ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சில பக்தர்கள் முன்பதிவு செய்யாமல் வருகின்றனர். இவர்கள் சிரமங்களை கருத்தில் கொண்டு உடனடி முன்பதிவு அடிப்படையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதாக திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால் முன்பதிவு செய்யாமல் கோயிலுக்கு வர வேண்டாம் எனவும் பக்தர்களை தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க