Sabarimala: சபரிமலை கோலாகலம்.. நெய்யபிஷேக வழிபாடுகளுடன் இன்றுடன் நிறைவு! குவியும் பக்தர்கள்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று காலை 9 மணியுடன் நெய்யபிஷேக வழிபாடுகளுடன் சீசன் நிறைவு பெறுகிறது.
கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகப்புகழ்பெற்றது ஆகும். சபரிமலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து ஐயப்பனை தரிசனம் செய்ய வருவது வழக்கம். குறிப்பாக, மகர ஜோதி தரிசனத்தை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிவது வழக்கம்.
நெய்யபிஷேகம்:
நடப்பாண்டிற்கான மகர விளக்கு பூஜை கடந்த 15ம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், மண்டல மற்றும் மகர விளக்கு சீசன் நிறைவாக இன்று நெய்யபிஷேகம் நடைபெறுகிறது. இன்று காலை 9 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் நடைபெற உள்ளது. நெய்யபிஷேகத்திற்கு பிறகு இன்று இரவு அத்தாள பூஜை நடைபெற உள்ளது. இந்த பூஜைக்கு பின் மாளிகப்புரம் மணிமண்டபத்தில் இருந்து ஐயப்ப ஊர்வலம் நடைபெறுகிறது. ஐயப்பனின் இந்த வீதி உலா சரம்குத்தி வரை சென்று பின்பு மீண்டும் சன்னிதானம் வருகிறது.
ஐயப்பன் கோயிலில் நாளை இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அதன்பின்பு, அரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட உள்ளது. நடை அடைக்கப்பட்ட பின்பு மாளிகப்புரத்தில் குருதி சடங்குகள் நடைபெற உள்ளது. இதன்பின்பு, நாளை மறுநாள் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும். இதையடுத்து, ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
குவியும் பக்தர்கள்:
இந்த சிறப்பு பூஜைகளுக்கு பிறகு திருவாபரண ஊர்வலம் மீண்டும் பந்தளத்துக்கு புறப்பட உள்ளது. இதையடுத்து, காலை 6 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும். அத்துடன் மகரவிளக்கு சீசன் நிறைவு பெறுகிறது. இன்று நெய்யபிஷேகம் நிறைவு நாள் என்பதால் ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
நடப்பாண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. குறிப்பாக, லட்சக்கணக்கான பக்தர்கள் அடுத்தடுத்த நாட்களில் குவிந்ததனர். இதையடுத்து, பக்தர்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
முன்னதாக, நடப்பாண்டிற்கான மகர விளக்கு பூஜை கடந்தாண்டு நவம்பர் 16ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. மண்டல பூஜைக்கான வழிபாடுகள் நடைபெற்ற பிறகு கடந்தாண்டு டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜை சிறப்பாக நடைபெற்றது. பின்னர் அன்றைய தினம் கோயில் நடை அடைக்கப்பட்டது. பின்னர், கடந்தாண்டு டிசம்பர் 30ம் தேதி நடை திறக்கப்பட்டது.
மேலும் படிக்க: PM Modi TN Visit: மாலை 04.50-க்கு சென்னை வருகிறார் பிரதமர் மோடி - தமிழ்நாட்டில் 3 நாட்கள் பயணத்தின் முழு விவரம் இதோ..!
மேலும் படிக்க: Ayodhya Ram Temple: பாபர் மசூதி இடிப்பும் அயோத்தி ராமர் கோயிலும்- முக்கிய முகங்கள் இவர்கள்தான்!