இலவச உணவு முதல் புலி நடனம் வரை – கேரள ஒணம் 2025 முன்னேற்பாடுகள்!
அத்தியாவசிய மளிகை பொருள்கள் அடங்கிய ஓணம் சிறப்பு தொகுப்புப் பொருள் நேரடியாகவும், இணையவழியாகவும் மக்களுக்கு விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.
ஓணம் பண்டிகை என்பது கேரளாவின் மிகப் பழமையான, முக்கியமான, கலாச்சார மற்றும் சமய பண்டிகையாகும். இது மகாபலி சக்கரவர்த்தி என்ற அன்பும் நீதியுமுடைய அரசனை நினைவுகூரும் விழாவாகும். இந்த பண்டிகைக்கு பல சிறப்புகள் உள்ளன.
ஓணம் என்பது, அசுரராஜா மகாபலி ஆண்ட காலத்தில், கேரளம் பெருமைபெற்ற “சமத்துவம், அமைதி, வளம்” ஆகியவற்றின் நினைவாக கொண்டாடப்படுகிறது. மகாபலி பக்தியும், நீதியும் நிறைந்தவன். வாமன அவதாரமாக வந்த விஷ்ணு அவரை பாதாளத்துக்கு அனுப்பினாலும், ஆண்டுக்கு ஒரு முறை கேரள மக்களை பார்வையிட அனுமதித்தார் என்று நம்பப்படுகிறது. புத்தாண்டு போல் கொண்டாடப்படும் ஓணம், கேரள மக்கள் வாழ்வில் புதிய தொடக்கமாக கருதப்படுகிறது. வீட்டை சுத்தம் செய்வது, புதிய உடைகள், குடும்ப ஒன்று கூடல் போன்றவை நிகழ்கின்றன.
பலவகை மலர்களால் வீட்டின் முன்னிலையில் சுழல்வடிவில் அமைக்கப்படும் அழகான பூக்கோலம் ஓணத்தின் முக்கிய அம்சம். 9 முதல் 26 வகை உணவுப் பொருட்களுடன் பரிமாறப்படும் மிகச் சிறப்பு கொண்ட உணவுவிருந்தும் நடைபெறும். அரிசி, பரிப்பு, சாம்பார், அவியல், தோரன், பழம், இனிப்பு (பாயசம்) ஆகியவை இடம்பெறும். படகு போட்டி,புலி நடனம், கதகளி போன்ற பாரம்பரிய கலை வடிவங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்கின்றனர். ஓணத்தை அனைத்து மதத்தினரும், சமூகத்தினரும் ஒருமித்துப் பாரம்பரியமாகக் கொண்டாடுவது ஒரு மகத்தான சிறப்பு.
தற்போது ஓணம் பண்டிகையின் முக்கிய நாளான திருவோணம் செப்டம்பா் 5-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், முதல்வா் பினராயி விஜயன் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஓணம் கொண்டாட்டங்களுக்கான முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டன. பல்வேறு அமைச்சா்கள் மற்றும் மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது, ஓணம் பண்டிகையையொட்டி, ஒரு வார கால திருவிழா கொண்டாட்டம், தலைநகா் திருவனந்தபுரத்தில் நடக்கும் பிரம்மாண்டமான கலைப் பண்பாட்டு ஊா்வலத்துடன் நிறைவடையும். இதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள கவடியாா் முதல் புகா் மணக்காடு வரையிலான சுமாா் 8 கி.மீ. நீளமான பகுதி விழா மண்டலமாக அறிவிக்கப்படும். தலைநகா் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும்.
அனைத்து நிகழ்ச்சிகளும் அரசின் பசுமை விதிகளைப் பின்பற்றி சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக நடத்தப்படும். மாவட்ட சுற்றுலா மேம்பாட்டுக் கழகங்கள் இந்த விழாக்களை ஏற்பாடு செய்யும். அனைத்து அரசுத் துறைகளும் இணைந்து செயல்பட்டு, ஓணம் கொண்டாட்டங்களை மிக சிறப்பாக நடத்த வேண்டும் என்று முதல்வா் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளாா். ஓணம் பண்டிகைக்கு முன்னதாக மாவட்டம் தோறும் ஓணம் சிறப்பு சந்தைகள் நடத்தப்படும். மேலும், அத்தியாவசிய மளிகை பொருள்கள் அடங்கிய ஓணம் சிறப்பு தொகுப்புப் பொருள் நேரடியாகவும், இணையவழியாகவும் மக்களுக்கு விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.





















