Kerala Train Fire: கேரளாவில் தீக்கிரையான நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்..! விபத்தா? திட்டமிட்ட சதிச்செயலா..?
தீ பெட்டிக்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என ரயில்வேதுறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். தீயணைப்பு படை வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
கேரள மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் தீ பிடித்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை 1:25 மணிக்கு, இந்த சம்பவம் நடந்துள்ளது. கண்ணூர் ரயில் நிலையத்தின் மூன்றாவது நடைமேடை அருகே ஆலப்புழா-கண்ணூர் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயில் 8வது யார்டில் நிறுத்தப்பட்டிருந்தது.
தீ பெட்டிக்கு தீ வைப்பா..?
தீ பெட்டிக்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என ரயில்வேதுறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். 3 தீயணைப்பு படை வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருந்த போதிலும் பெட்டி முற்றிலும் எரிந்து நாசமானது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் என்பதால் பயணிகள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
எக்ஸ்பிரஸ் ரயிலில் சக பயணி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்:
கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி இரவு கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 3 பயணிகள், சக பயணி ஒருவரால் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்டனர். 9 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி ஷாருக் சைபி என்ற இளைஞரை மகாராஷ்டிர மாநிலத்தில் கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.
ஷாருக் சைபி எரித்த ரயில் பெட்டியில்தான் தற்போது தீ பரவியுள்ளது. இந்த ரயில் எரிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை ஏற்கனவே விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சமீப காலமாக, ரயில் தொடர்பான விபத்துகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற டபுள் டக்கர் ரயில் குப்பம் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
ரயில் தொடர்பான விபத்துகள்:
கடந்த மாதம் 15ஆம் தேதி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 7.25 மணிக்கு டபுள் டக்கர் ரயில் பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலையம் புறப்பட்டு சென்றது. குப்பம் ரயில் நிலையத்தை கடந்து காலை 11.15 மணியளவில் பங்காருபேட்டை நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் இருந்து 2 ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் அந்த பெட்டிகளில் பயணித்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் நல்வாய்ப்பாக பயணிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்தால் அவ்வழியாக செல்லும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
ரயில் தொடர்பான விபத்துகளை தவிர்க்க பல்வேறு விதமான நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.