Kerala: முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ்க்கு தடை - கேரள அரசு அதிரடி உத்தரவு..! காரணம் என்ன..?
கேரளாவில் அசைவ மயோனைஸ், பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Kerala : கேரளாவில் அசைவ மயோனைஸ், பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மயோனைஸ் ஏன் தடை?
கடந்த ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஆன்லைனில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் பிரியாணி முதலிடம் பிடித்தது. ஆனால் அத்தகைய பிரியாணியே இரண்டு பெண்களின் உயிரைப் பறித்த சம்பவம் கடந்த ஒரு வாரமாக கேரள மக்களிடையே பேசுபொருளாக அமைந்தது.
முதல் சம்பவம் டிசம்பர் 29 ஆம் தேதி நடைபெற்றது. கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த ராஷ்மி என்ற பெண் அங்குள்ள உணவகம் ஒன்றில் சிக்கன் மற்றும் மந்தி பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட ராஷ்மி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஜனவரி 1 ஆம் தேதி உயிரிழந்தார்.
அடுத்தடுத்து உயிரிழப்பு:
இரண்டாவது சம்பவம் புத்தாண்டு தினத்தன்று இரவு நேரத்தில் கேரளாவின் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் அஞ்சுஸ்ரீபார்வதி மந்தி பிரியாணி, சாலட் ஆகியவற்றை ஆர்டர் செய்து குடும்பத்துடன் சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே குடும்பத்தினருக்கு வயிற்று வலி ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அஞ்சுஸ்ரீயின் அம்மா அம்பிகா, சகோதரர் ஸ்ரீகுமார், உறவினர் ஸ்ரீநந்தா, அனுஸ்ரீ ஆகிய 5 பேரில் அஞ்சுவுக்கு மட்டும் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.
உடனடியாக காசர்கோடு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அஞ்சு உடல்நிலை மோசமாக கடந்த ஜனவரி 6 ஆம் தேதி மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜனவரி 7 ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஹோட்டல் உரிமையாளர் உட்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
மயோனைஸ் தடை
இதன் எதிரொலியாக, கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் அசைவ மயோனைஸ், பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ்க்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் கேரள மாநிலத்தில் கேட்டரிங் சேவைகளுக்கு உரிமம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அம்மமாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
முட்டையின் மஞ்சள் கரு மற்றும் ஒரு அமில திரவம் (எலுமிச்சை சாறு அல்லது வினிகர்) ஆகியவற்றின் கலவையான மயோனைஸ் தயாரிக்கப்படுகிறது. நீண்ட நாட்கள் மயோனைஸை சேமிப்பதால் அதில் பாக்டீரியாக்கள் அதிக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்ததை அடுத்து கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
காலாவதி தேதி அவசியம்
இதனை தொடர்ந்து, அனைத்து உணவுப் பொட்டலங்களிலும் உற்பத்தி மற்றும் காலாவதி தேதி போன்ற விவரங்கள் கட்டாயம் கொண்டிருக்க வேண்டும். உணவகங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் அதிகாரிகளால் சுகாதார அட்டைகள் வழங்கப்படும். அனைத்து உணவகங்களில் ஆய்வு நடத்த ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு மூலம் அனைத்து உணவகங்களிலும் ஆய்வு நடத்தப்படும். மேலும், மக்கள் அளிக்கும் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
ஹோட்டல்கள் முழுவதும் சுகாதார அளவை (ratings) மதிப்பிடுவதற்கான ஒரு செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் கூறினார். அனைத்து உணவு விற்பனை நிலையங்களுக்கும் உரிமம் மற்றும் அனுமதி கட்டாயம் என்றும், உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் மட்டுமே சாலையோர உணவகங்கள் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.