PM Modi Speech : பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் இருக்கை - காசி தமிழ்சங்கமத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு..!
இந்திய பன்முக கலாசாரத்தின் கொண்டாட்டமே இந்த சங்கமம். காசி மற்றும் தமிழ்நாடு சங்கமிக்கும் இந்த இடம் கங்கை மற்றும் யமுனையின் சங்கமம் போல் புனிதமானது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
உத்தர பிரதேசம் வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். 75ஆவது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடக்கும் இந்த நிகழ்வுக்கு ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்து பல குழுக்களாக பாரம்பரிய கலைஞர்கள் உத்தரபிரதேசம் சென்றுள்ளனர்.
காசி தமிழ்சங்கமம் :
பழங்காலம் தொட்டே தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் உள்ள தொடர்பை கொண்டாடும் விதமாக இந்த சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் இந்த கொண்டாட்ட விழா நடைபெற்ற வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநிலங்களவை உறுப்பினர் இளையராஜா, காசி தமிழ் சங்கத்தை தொடங்கியதற்காக பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினார். பின்னர், பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் பெருமை குறித்தும் தமிழ் மொழியின் வளமை பற்றியும் எடுத்துரைத்தார்.
தமிழ்நாட்டின் பழமை :
தொடர்ந்து பேசிய அவர், "நதிகளின் சங்கமம் முதல் அறிவின் சங்கமம் எண்ணங்களின் சங்கமம் வரை, நம் நாட்டில் சங்கமம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய பன்முக கலாசாரத்தின் கொண்டாட்டமே இந்த சங்கமம். காசி மற்றும் தமிழ்நாடு சங்கமிக்கும் இந்த இடம் கங்கை மற்றும் யமுனையின் சங்கமம் போல் புனிதமானது.
காசி இந்தியாவின் ஆன்மீக மற்றும் கலாச்சார தலைநகரமாக இருந்தாலும், இந்தியாவின் பழமையான வரலாற்றை தமிழ்நாடு கொண்டுள்ளது. இந்தியா தனது 75ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் நேரத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. கடந்த 1000 ஆண்டுகளாக கலாச்சார ஒற்றுமையை பின்பற்றி வரும் நாடு இந்தியா.
In Varanasi, addressing the 'Kashi-Tamil Sangamam.' It is a wonderful confluence of India's culture and heritage. https://t.co/ZX3WRhrxm9
— Narendra Modi (@narendramodi) November 19, 2022
காசியின் வளர்ச்சியில் தமிழ்நாடு மிக முக்கியப் பங்காற்றி உள்ளது. தமிழ்நாட்டின் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மகத்தான பங்களிப்பை ஆற்றி உள்ளார்.
காசியும், தமிழ்நாடும் :
காசி மற்றும் தமிழ்நாடு இரண்டிலும் காலத்தால் அழியாத கலாச்சாரம் உள்ளது. நாகரிகத்தின் மையங்களாக திகழ்கின்றன. பழமையான மொழிகளான சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகியவற்றின் மையங்களாக இந்த பகுதிகள் விளங்குகின்றன.
காசி மற்றும் தமிழ்நாடு இரண்டும் இசை, இலக்கியம் மற்றும் கலையின் ஆதாரங்களாக இருக்கின்றன. காசியின் தபேலாவும் தமிழ்நாட்டின் தன்னுமையும் புகழ்பெற்றவை. காசியில், நீங்கள் பனாரசி புடவையைப் பெறுவீர்கள், தமிழ்நாட்டில் நீங்கள் உலகம் முழுவதும் அறியப்பட்ட காஞ்சிவரம் பட்டுகளைப் பார்ப்பீர்கள்.
பாரதியார் பெயரில் இருக்கை :
உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியின் தாயகம் இந்தியா. இதைப் பற்றி நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். மொழியை வலுப்படுத்தும் நோக்கில் செயல்பட வேண்டும். உலகின் மிகப் பழமையான இந்த மொழியை உலகுக்குச் சொல்லும் போது ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்கிறது. பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் இருக்கை அமைக்கப்படும்" என்றார்.