காங்கிரஸ் தலைவர் கார்கேவின் மகனுக்கு அமைச்சர் பதவி...கர்நாடக அமைச்சரவையில் பட்டியலினத்தவருக்கு முக்கியத்துவமா..?
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி. பரமேஸ்வரா, கார்கேவின் மகன் பிரியங் கார்கே ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக மாநில தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் கடந்த 13ஆம் தேதி வெளியாகியது. காங்கிரஸ் கட்சி பெரிய வெற்றியை பதிவு செய்தது. காங்கிரஸ், தனிப்பெரும்பான்மை பெற்றாலும், அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வதில் தொடர் இழுபறி நீடித்தது.
கர்நாடகாவில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ்:
கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் இடையே முதலமைச்சர் பதவிக்கு கடும்போட்டி நிலவி வந்தது. இப்படிப்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சித்தராமையா மற்றும் சிவக்குமார் தனித்தனியாக சந்தித்து பேசினர். இதனை அடுத்து, ராகுல் காந்தியையும் இருவரும் தனித்தனியாக சந்தித்து முதல்வர் பதவி பற்றி பேசினர்.
கட்சியின் பெரும்பாலான எம்எல்ஏக்களின் ஆதரவு, சித்தராமையாவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய டி.கே.சிவக்குமார், சித்தராமையாவுக்கு முதலமைச்சர் பதவி வழங்க ஒப்பு கொள்ளவில்லை. இச்சூழலில்,
நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் முடிவுக்கு வராத பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க களத்தில் இறங்கினார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி.
இறுதியில், முதலமைச்சர் பதவி சித்தராமையாவுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. துணை முதலமைச்சர் பதவியை ஏற்க டி.கே.சிவக்குமார் ஒப்பு கொண்டார். காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட சித்தாராமையா, ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
அமைச்சர் பதவி யாருக்கு?
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நாளை மதியம் 12:30 மணிக்கு முதலமைச்சர் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இச்சூழலில், யார் யாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது என்பது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர். ஏற்கனவே, முதலமைச்சர் பதவி, தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், அமைச்சரவையில் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
அந்த வகையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி. பரமேஸ்வரா, கார்கேவின் மகன் பிரியங் கார்கே ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் உள்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல், ஆறாவது முறை எம்எல்ஏவாக தேர்வாகியுள்ள கே.ஜே. ஜார்ஜ், முன்னாள் மத்திய அமைச்சர் கே.எச். முனியப்பாவின் மகள் ரூபா, கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் ஈஸ்வர் காந்த்ரே, முன்னாள் அமைச்சர் அகமது கான், காங்கிரஸ் மூத்த தலைவர் பி.ஆர். ரெட்டி, பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த லக்ஷ்மன் சவடி ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
முன்னாள் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத் ராஜ் துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா, ஆறுமுறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வான தன்வீர் ஆகியோருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.