மின்சாரத்தை திருடினாரா முன்னாள் முதலமைச்சர்.. திருட்டு கனெக்சனால் சிக்கிய குமாரசாமி.. நடந்தது என்ன?
கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சரான குமாரசாமி, திருட்டு கனெக்சன் கொடுத்து மின்சாரத்தை திருடியதாக புகார் எழுந்தது.
நாட்டின் முன்னாள் பிரதமர் தேவகவுடா. மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரான இவர், கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 1997ஆம் ஆண்டு வரை, பிரதமராக பதவி வகித்தார். இவரது மகன் எச் டி குமாரசாமி. கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர். இவர், திருட்டு கனெக்சன் கொடுத்து மின்சாரத்தை திருடியதாக புகார் எழுந்தது.
திருட்டுத்தனமாக மின்சார கனெக்சன் கொடுத்தாரா குமாரசாமி?
தீபாவளி அன்று, ஜெபி நகரில் உள்ள தனது வீட்டுக்கு திருட்டுத்தனமாக மின்சார கனெக்சன் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, சட்டவிரோத எலக்ட்ரிசிட்டி கனெக்சன் கொடுத்ததற்காக 68,526 ரூபாய் அபராதமாக செலுத்தியுள்ளார் குமாரசாமி. ஆனால், இது, நியாயமற்றது என்றும் அரசியல் நோக்கத்துக்காக தான் பழிவாங்கப்படுவதாகவும் குமாரசாமி விளக்கம் அளித்துள்ளார்.
கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசை விமர்சித்து வருவதால் தான் பழிவாங்கப்படுவதாக குமாரசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். பெங்களூரு மின்சார பகிர்மான நிறுவன லிமிடெட்டின் (பெஸ்காம்) உதவி செயற்பொறியாளருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சோதனை நோக்கங்களுக்காக ஒரு கம்பியை இழுத்து தனது வீட்டிற்கு எதிரே உள்ள மின்கம்பத்தில் நேரடியாக இணைத்த மின்வாரிய ஊழியர் மீது குற்றம் சாட்டினார்.
"இதையறிந்த உடனே மின்கம்பத்தில் இருந்த கம்பியை துண்டிக்கும்படி ஊழியர்களிடம் தெரிவித்தேன். வீட்டில் அலங்கார விளக்குகளை ஏற்றும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது நான் வீட்டில் இல்லை. ராமநகர மாவட்டம் பிடாடியில் உள்ள எனது வீட்டில் இருந்தேன். எலக்ட்ரீஷியன் எனக்கு தெரியாமல் இந்த வேலை செய்துள்ளார்" என்றார்.
நடந்தது என்ன?
தொடர்ந்து பேசிய குமாரசாமி"புகார்தாரரான பெஸ்காமின் உதவி செயற்பொறியாளர், திருட்டு நடப்பதை நேரில் பார்த்ததாக கூறியுள்ளார். இது, உண்மைக்கு முரணாக இருக்கிறது. என் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரில் பல தவறுகள் நடைபெற்றுள்ளன. என் மீது வழக்குப் பதிவு செய்த பெஸ்காம் பொறியாளர், மின்னணு மற்றும் சமூக ஊடகங்களில் வீடியோவைப் பார்த்த பிறகுதான் எனது குடியிருப்புக்கு ஆய்வு செய்ய வந்ததாக கூறியுள்ளார்.
இது, நியாயமற்றது. அதிகப்படியான அபராதம் செலுத்தியுள்ளேன். அத்தகைய நடைமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பது ஒரு நுகர்வோராக எனக்கு உரிமை உள்ளது" என்றார்.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை சாடிய அவர், "எனது பரம எதிரிகள் நடத்தும் தற்போதைய அரசாங்கம் மின்சாரத்துறையை தவறாக நிர்வகிப்பது தொடர்பாக நான் பதிவிடும் ட்வீட்கள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்புகளுக்காக நான் பழிவாங்கப்படுகிறேன் என கருதுகிறேன். நான் மின்சாரத்தை திருடியதாக முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்" என்றார்.