![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கர்நாடக சட்டமன்ற தேர்தல்; நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்; பின் வாங்கிய ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர்கள்!
காந்தி நகர் சட்டப்பேரவை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் மனுவை வாபஸ் பெற முடிவு செய்துள்ளார்.
![கர்நாடக சட்டமன்ற தேர்தல்; நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்; பின் வாங்கிய ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர்கள்! Karnataka Election Commission had sent a notice to the candidate for an explanation, AIADMK has decided to withdraw. கர்நாடக சட்டமன்ற தேர்தல்; நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்; பின் வாங்கிய ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/23/906e1b26a58f0b14e02e0e31cc7eed1d1682253932396333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கர்நாடகாவின் காந்தி நகர் சட்டமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் மனுவை வாபஸ் பெற முடிவு செய்துள்ளார். ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளருக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக சட்டமன்ற தேர்தல்:
கர்நாடகாவில் வரும் மே மாதம் 10ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் முடிவுகள், வரும் மே 13ஆம் தேதி வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் வரும் மே மாதம் 10 தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. ஒருவர் பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். கர்நாடகாவில் 5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.இதில் 2.62 கோடி ஆண் வாக்காளர்களும், 2.59 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தே வாக்கு அளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று முக்கிய கட்சிகள் உள்ளன. ஆளும் பாஜக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், பழைய மைசூரு பகுதியில் செல்வாக்கு மிக்க கட்சியாக உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம். பொதுவாக, இந்த மூன்று அரசியல் கட்சிகளை சுற்றிதான் அரசியல் நகர்வு மேற்கொள்ளப்படும்.
ஆனால், அதையும் தாண்டி தமிழ்நாட்டில் உள்ள ஒரு கட்சியும் கர்நாடக தேர்தலில் பொதுவாக அதிக கவனம் செலுத்துவது வழக்கம். தமிழ்நாட்டின் அண்டை மாநிலம் என்பதால் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். இதன் காரணமாகவே, தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அதிமுக பல ஆண்டுகளாக போட்டியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்த முறை கர்நாடக தேர்தலில் களம் காண தயாராகி வருகிறது அதிமுக.
ஓபிஎஸ் மனுக்கள் ஏற்பு
19 ஆம் தேதி மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், நேற்று மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர்கள் 2 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. அதன்படி, கோலார் தங்கவயலில் அனந்தராஜ், காந்தி நகரில் கே.குமார் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
அதேபோல, கர்நாடக புலிகேசி நகரில் போட்டிட வேட்புமனு தாக்கல் செய்த எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த அதிமுக வேட்பாளர் அன்பரசனின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அதிமுக கடிதம்
இந்நிலையில், ஓபிஎஸ் அணி வேட்பாளர்களை அதிமுக வேட்பாளர்களாக ஏற்றுக் கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக தரப்பில கடிதம் எழுதப்பட்டுள்ளது. கடிதத்தில் இருப்பதாவது, "கர்நாடகாவில் புலிகேசி நகரில் மட்டுமே அதிமுக போட்டியிடுகிறது. தவறான புரிதலால் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் மனுக்களை ஏற்றுள்ளனர். இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கான படிவத்தில் கையெழுத்திட எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அதிகாரம் உண்டு” என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்:
இந்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரிடம் விளக்கம் கேட்டு கர்நாடக தேர்தல் ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர்கள் மனுவை திரும்ப பெற முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)