Watch Video: நான் இருக்கப்பவே விமர்சனமா..? சாமியாரிடம் மைக்கை பறித்த முதலமைச்சர் - வைரலாகும் வீடியோ..!
முதலமைச்சர் முன்பே உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து மது குரு கேள்வி எழுப்பியதும் அதற்கு அவர் பதில் அளித்திருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பெரும்பான்மையை பெறவில்லை என்றாலும் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. .ஆட்சி அமைக்க போதுமான எம்எல்ஏக்கள் எண்ணிக்கை இருந்தபோதிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆட்சி அமைக்க முதலில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
பா.ஜ.க. ஆட்சி
ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து, பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா கர்நாடக முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால், நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு முன்னதாகவே, அவர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, காங்கிரஸ் ஆதரவோடு மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எச்.டி. குமாரசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஆட்சி அமைத்த 14 மாதங்களிலேயே, ஆளும் கூட்டணியின் 16 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.
இதை தொடர்ந்து, கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. எடியூரப்பா முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார். ஆனால், எடியூரப்பாவுக்கு எதிராக பாஜக மூத்த தலைவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்த, முதலமைச்சர் பதவியில் இருந்து விலகும்படி பாஜக உயர் மட்ட தலைவர்கள் எடியூரப்பாவை கேட்டு கொண்டதாக கூறப்பட்டது.
இறுதியில், முதலமைச்சர் பதவியில் இருந்து அவர் விலக, பசவராஜ் பொம்மைக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, பாஜக அரசு மீது கடும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகிறது. அதுமட்டும் இன்றி, பசவராஜ் பொம்மை ஆட்சி காலத்தில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும் விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெங்களூருவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் மேடையில் பசவராஜ் பொம்மை அருகே அமர்ந்திருந்த இந்து மது குருவான ஈஸ்வரானந்தபுரி சுவாமிகள் உள்கட்டமை வசதிகள் குறித்து விமர்சனம் செய்தார்.
தன் முன்பே தனது ஆட்சி விமர்சிக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாத முதலமைச்சர் பசவராஜ் அவர் பேசி கொண்டிருந்தபோதே, மைக்கை பறித்தார். பின்னர், மைக்கில் பேசிய பசவராஜ் பொம்மை தான் உறுதிமொழி மட்டும் அளிக்கவில்லை. பிரச்னையை தீர்ப்பதற்கான நிதியை விடுவித்திருப்பதாக கூறினார்.
#WATCH | Karnataka CM takes mic from seer Eshwaranandapuri Swami during an event to respond to his criticism on civic issues in Bengaluru, y'day
— ANI (@ANI) January 27, 2023
CM said that he isn't one who only gives assurances but has released funds to find a solution to these problems pic.twitter.com/R3v3rAhfJz
முதலமைச்சர் முன்பே உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து மதகுரு கேள்வி எழுப்பியதும் அதற்கு அவர் மதகுருவின் மைக்கை பறித்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு பெய்த மழையால் பெங்களூருவில் மோசமான அளவில் பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.