இந்த சாதி அதிகமா? அந்த சாதி அதிகமா? லீக்கானது சாதிவாரி கணக்கெடுப்பு ரிப்போர்ட்.. பரபர தகவல்கள்
சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை லீக்கான நிலையில், அதில் பல முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. லீக்கான தகவல்களின் அடிப்படையில், கர்நாடகாவில் இஸ்லாமியர்களே தனிப்பெரும் சமூகமாக இருக்கிறது. அம்மாநில மொத்த மக்கள் தொகையில் 12.83 சதவிகிதத்தினர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் முக்கிய தகவல்கள் லீக்கான நிலையில், அம்மாநில அரசியலில் அது பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. லீக்கான தகவல்களின் அடிப்படையில், அம்மாநிலத்தில் இஸ்லாமியர்களே தனிப்பெரும் சமூகமாக இருக்கிறது. கர்நாடகாவின் மொத்த மக்கள் தொகையில் 12.83 சதவிகிதத்தினர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூகப் பொருளாதாரக் கல்வி ஆய்வறிக்கை என்ற பெயரில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான தகவல்கள் எடுக்கப்பட்டுள்ளது.
எந்த சாதி அதிகம்?
கடந்த 2015ஆம் ஆண்டு, சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, சமூகப் பொருளாதாரக் கல்வி ஆய்வறிக்கை என்ற பெயரில் சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வினை நடத்தியது. எச். காந்தராஜு தலைமையிலான மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், இந்த தரவுகளை சேகரிக்க தொடங்கியது. இதற்கான களப்பணி 2018 ஆம் ஆண்டு முடிவடைந்த போதிலும், இறுதி அறிக்கை 2024ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம்தான் முடிக்கப்பட்டது.
கர்நாடக அரசியலில் தொடர் ஆதிக்கத்தை செலுத்தி வரும் வொக்கலிகா, லிங்காயத் சமூகத்தினர், இந்த ஆய்வறிக்கைக்கு தொடர் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கர்நாடகாவில் இதுவரை ஆட்சி செய்த 23 முதலமைச்சர்களில் 16 பேர், வொக்கலிகா மற்றும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர்கள். அந்த அளவுக்கு கர்நாடக அரசியல், இந்த இரண்டு சமூகத்தை சுற்றிதான் சுழல்கிறது. குறிப்பாக, லிங்காயத் சமூகத்தை சேர்ந்த 9 பேர், கர்நாடக முதலமைச்சராக இருந்துள்ளனர்.
சாதிவாரி கணக்கெடுப்பில் பரபரப்பு தகவல்கள்:
கர்நாடகாவில் தாங்கள்தான் அதிக எண்ணிக்கையில் இருக்கிறோம் என இந்த இரண்டு சமூகத்தவரும் தொடர்ந்து கூறி வந்த நிலையில், இவர்களின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமூகப் பொருளாதாரக் கல்வி ஆய்வறிக்கை என்ற ஆயுதத்தை கையில் எடுத்தார் சித்தராமையா.
இந்த ஆய்வறிக்கையை ஏற்று கொள்ளக்கூடாது என வொக்கலிகா சமூகத்தை சேர்ந்தவர்களும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், சமூகப் பொருளாதாரக் கல்வி ஆய்வறிக்கையின் முக்கிய தகவல்கள் லீக்காகி இருக்கிறது. இது, கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
லீக்கான தரவுகளின் அடிப்படையில், கர்நாடகாவில் இஸ்லாமியர்களே தனிப்பெரும் சமூகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. அம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 12.83 சதவிகிதத்தினர் அதாவது 76 லட்சத்து 76 ஆயிரத்து 247 பேர் இஸ்லாமியர்கள் உள்ளனர் என லீக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கும் ஆதிக்க சாதிகள்:
பெரும்பாலான மக்கள், தங்களின் சாதியின் உட்பிரிவுடன் தங்களை பதிவு செய்து கொள்ள விரும்பி உள்ளனர். எனவே, எஸ்சி என குறிப்பிடாமல் அதில் எந்த பிரிவை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டு, அவர்களின் மக்கள் தொகை, பொருளாதார, கல்வி நிலை ஆகியவை கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த உட்பிரிவை கணக்கில் எடுத்து கொள்ளாமல், சாதிய ரீதியாக பார்த்தால், கர்நாடகாவில் பட்டியல் சாதியினரே தனிப்பெரும் சமூகமாக உள்ளது. மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 18.27 சதவிகிதத்தினர், அதாவது 1 கோடியே 09 லட்சத்து 29 ஆயிரத்து 347 பேர் பட்டியல் சாதியினராக உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இஸ்லாமியர்கள் 12.83 சதவிகிதத்தினர் உள்ளனர்.
கர்நாடகாவின் மூன்றாவது தனிப்பெரும் சாதியாக வீரசைவ லிங்காயத்துகள் உள்ளனர். அவர்கள், 11.09 சதவிகிதத்தினர் உள்ளனர். மாநிலத்தின் மக்கள் தொகையில் வொக்கலிகா சமூகத்தினர் 10.31 விழுக்காட்டினராக உள்ளனர். குருபாஸ் 7.31 சதவிகிதத்தினராக உள்ளனர். 7.1 விழுக்காட்டினர் பழங்குடியினராக இருக்கின்றனர். பிராமணர்கள் 2.61 சதவிகிதத்தினராக உள்ளனர். தங்களுக்கு சாதி அடையாளம் இல்லை என 3 லட்சத்து 32 ஆயிரத்து 098 பேர் (0.56%) என குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிக்க: Tamil New Year 2025: சித்திரையா, தையா: தமிழ் புத்தாண்டு எது? அறிவியல் சொல்வது என்ன?





















