Dengue Fever: பெங்களூரை அச்சுறுத்தும் டெங்கு! நாளுக்கு நாள் அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு!
கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பதால் மக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சீதோஷ்ண நிலை மாறும்போது காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு வியாதிகளை மக்கள் சந்திக்கும் சூழல் ஏற்படும். இந்த சூழலில், கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக, அந்த மாநில தலைநகர் பெங்களூரில் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.
பெங்களூரை அச்சுறுத்தும் டெங்கு:
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதித்த மருத்துவர்கள் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பெங்களூரில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவது இதன்மூலம் உறுதி செய்யப்பட்டது.
அந்த மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த சனிக்கிழமை மட்டும் அந்த மாநிலத்தில் புதியதாக 175 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் மட்டும் 115 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் புதியதாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 45 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜிகா வைரஸ் தாக்கம்:
121 நோயாளிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 53 நோயாளிகள் 18 வயதுக்கு கீழே இருப்பவர்கள், ஒரு வயதுக்கு குறைவாக ஒரு குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட அஞ்சனபுரா கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் என்ற 11 வயது சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அந்த மாநிலத்தில் ஜிகா வைரசால் 74 வயது முதியவர் உயிரிழந்த நிலையில், தற்போது டெங்கு காய்ச்சலால் 11 வயது சிறுவனும் உயிரிழந்த சம்பவம் அந்த மாநிலத்தில் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் டெங்கு மற்றும் ஜிகா வைரசுக்கு எதிராக தீவிர சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை:
கர்நாடகாவில் நடப்பாண்டில் மட்டும் தற்போது வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1908 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் டெங்கு மற்றும் ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பதால் அண்டை மாநிலமான தமிழ்நாடு, கேரள மற்றும் ஆந்திர மாநில சுகாதரத்துறையினர் கர்நாடக எல்லைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இனி மழைக்காலம் வரும் என்பதால் கர்நாடகா சுகாதாரத்துறையினர் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க: ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
மேலும் படிக்க: Arun IPS: மெக்கானிக்கல் இன்ஜினியர் முதல் சென்னை கமிஷனர் வரை! யார் இந்த அருண் ஐ.பி.எஸ்.?