Karnataka Election 2023: அச்சச்சோ.. வாக்குப்பெட்டியை மறந்து சென்ற அதிகாரிகள்..! கர்நாடகாவில் நடந்தது என்ன?
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, பலத்த போலீஸ் பாதுகாப்படன் நாளை நடைபெற உள்ளது.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, பலத்த போலீஸ் பாதுகாப்படன் நாளை நடைபெற உள்ளது. இதனால் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
கர்நாடக தேர்தல்:
தென்னிந்தியாவில் பாஜக ஆட்சி செய்யும் ஒரே மாநிலம் என்பதால், கர்நாடக சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானது முதலே அந்த தேர்தலின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி என, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் அனைவரும் கர்நாடகாவில் முகாமிட்டு தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர். ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற சூறாவளி பரப்புரையை தொடர்ந்து, கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
73.19% வாக்குகள் பதிவு:
224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 பேர் தகுதி பெற்று இருந்தனர். ஆனால், கடந்த 10ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்ற தேர்தலில், 73.19 சதவிகிதம் பேர் மட்டுமே வாக்களித்தனர்.
பலத்த பாதுகாப்பு:
இதையடுத்து வாக்குகள் பதிவாகியுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர் அந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு அறைகளும் சீல் வைக்கப்பட்டன. அந்த மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கையை தொடர்ந்து, இன்று மாலை 6 மணி முதல் வரும் 14ம் தேதி மாலை 6 மணி வரை மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு எற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை வாக்கு எண்ணிக்கை:
34 மையங்களில் இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. காலை 8 மணிக்கு வாக்குகளை எண்ணும் பணி தொடங்குகிறது. பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை தொடர்ந்து அவற்றும் எண்ணும் சுற்றுகளின் எண்ணிக்கை இருக்கும். பகல் 1 மணிக்குள் மாநிலம் முழுவதும் முன்னணி நிலவரம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்குப்பெட்டியை மறந்து சென்ற அதிகாரிகள்:
இதனிடையே, சிக்மங்களூரு தொகுதிக்கு உட்பட்ட பென்சன் மொகல்லா கிராமத்தில் உள்ள பள்ளியில் 2 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வி.வி. பேட் ஆகியவற்றை அலுவலர்கள் சீல் வைத்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வி.வி. பேட் இயந்திரத்தை எடுத்துச் செல்ல மறந்துள்ளனர். இது அந்த பகுதியில் இருந்த கட்சி முகவர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தகவலறிந்து வந்த தேர்தல் அலுவலர்கள் தாங்கள் விட்டுச் சென்ற வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றுள்ளனர். இது பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.