மீண்டும் நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து... பற்றி எரியும் கான்பூர்: பாஜக நிர்வாகி கைது!
நுபுர் சர்மாவின் கருத்தை கண்டித்து உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் இஸ்லாமியர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக கான்பூர் மாவட்ட பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன் பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்க்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தார். இந்த கருத்தை டெல்லி பாஜக நிர்வாகி நவீன் ஜிந்தால் நியாயப்படுத்த இருவரையும் பதவி நீக்கம் செய்து பாஜக தலைமை நடவடிக்கை எடுத்தது. விஸ்வரூபம் எடுத்த இவ்விவகாரத்தில் அரபு நாடுகள் மத்திய அரசை கடுமையாக கண்டித்தது. இந்தியாவுக்கான தூதரை அழைத்து தங்களது கண்டனத்தை பதிவு செய்தன
இதனிடையே நுபுர் சர்மாவின் கருத்தை கண்டித்து உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் இஸ்லாமியர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதைமீறி பரேட் சந்தை பகுதியில் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் அவற்றை மூட இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தின. ஆனால் உரிமையாளர்கள் கடைகளை மூட மறுத்ததால் அவர்கள் மீது 100க்கும் மேற்பட்டோர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய பிரதிநிதிகள் இல்லாத ஆளுங்கட்சியாக மாறும் பாஜக: ரிப்போர்ட் சொல்வது என்ன?
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 100க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து கான்பூர் மாவட்ட பாஜக இளைஞரணி உறுப்பினர் ஹர்ஷித் ஸ்ரீவஸ்தவா நபிகள் நாயகம் குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவதூறு கருத்து வெளியிட்டு நீக்கினார். மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவித்ததாக அவர் கைது செய்யப்பட்டார். இந்த போராட்டம் காரணமாக கான்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் நேஹா ஷர்மாவை உத்தரப்பிரதேச அரசு செவ்வாய்க்கிழமை இடமாற்றம் செய்தது.
இதேபோல் போராட்டக்காரர்களுக்கு பாட்டில்களில் எரிபொருள் சப்ளை செய்ததாக சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் பெட்ரோல் நிலையம் ஒன்றிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் நடத்திய விசாரணையில் போராட்டக்காரர்களில் பலர் வெளியூரில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வன்முறை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான ஹயாத் ஜாபர் ஹஷ்மி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள 40 பேரின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இதனால் உத்தரப்பிரதேசத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்