Rahul-Kamal Meet: ஒரு மணி நேரம் நடந்த ராகுல்காந்தி - கமல்ஹாசன் ஆலோசனை...! அப்படி என்ன பேசினார்கள்..?
ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்த உரையாடலின்போது அன்பை விதைக்கும் காந்திய அரசியலின் அவசியம் குறித்தான தங்களது கருத்துகளை பரிமாறிக் கொண்டனர் என மக்கள் நீதி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியின் தேச ஒற்றுமைக்கான நடைபயணத்தில் கலந்துகொண்ட கமல்ஹாசன், அதைத்தொடர்ந்து ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியது குறித்து மக்கள் நீதி மையம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. இருவருக்கும் இடையேயான சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
டெல்லி சென்ற கமல்ஹாசன்
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் யாத்ராவை கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தொடங்கினார். தமிழ்நாட்டில் தொடங்கிய இப்பயணம் கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களை கடந்து டெல்லியை அடைந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை (டிச.24) தொடங்கி டெல்லியில் தனது ராகுல் காந்தி தொடங்கிய நிலையில், நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன், காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், பவன் கேரா, பூபிந்தர் சிங் ஹூடா, குமாரி செல்ஜா, ரந்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் நீதி மையம் ட்வீட்
இந்நிலையில் நடைபயணத்துக்குப் பிறகு கமல்ஹாசன் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியது குறித்து மக்கள் நீதி மய்யம் முன்னதாக ட்வீட் செய்துள்ளது.
“மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார். மக்கள் நலனுக்காகவும் தேச ஒற்றுமைக்காகவும் சக இந்தியனாக 'பாரத் ஜோடோ யாத்திரையில்' பங்கேற்றமைக்காக ம.நீ.ம. தலைவருக்கு நன்றி தெரிவித்தார் ராகுல் காந்தி.
ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்த உரையாடலின்போது இந்திய அரசியல் சாசனத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகள், மக்களிடையே பிளவையும் வெறுப்பையும் பரப்பும் மதவாத அரசியலுக்கு மாற்றாக, ஒற்றுமை, அன்பை விதைக்கும் காந்திய அரசியலின் அவசியம் குறித்தான தங்களது கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.
மேலும் விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் நலனையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி, இளைஞர்களின் நலனை பாதுகாத்தல், கிராம சுயாட்சி, மொழித் திணிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதித்தனர்” என மக்கள் நீதி மையம் பதிவிட்டுள்ளது.
’2 கொள்ளுப்பேரன்கள் இணைந்த யாத்திரை’
டிச.24ஆம் தேதி தேச ஒற்றுமைப் பயணத்தில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன், “ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை பயணத்தில் இரண்டு கொள்ளுப்பேரன்கள் இணைந்து நடக்கிறோம். அரசியலமைப்பு சட்டத்திற்கு நெருக்கடி வந்தால் வீதியில் இறங்கி போராடுவேன். எனது அரசியல் பயணம் மக்களுக்காக தொடங்கியது. எனக்காக அல்ல" என்று தெரிவித்தார். அப்போது இடைமறித்த ராகுல்காந்தி தமிழர்கள் இங்கு இருக்கிறார்கள், ஆகையால் நீங்கள் தமிழ் பேசுங்கள் என்று கமல் ஹாசனிடம் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து தமிழில் கமல்ஹாசன் பேசத் தொடங்கியபோது, “ தமிழில் பேச வேண்டும் என்று ராகுல் காந்தி என்னை கேட்டுக்கொண்டு இருக்கிறார். அதனால் அவரை என் சகோதரராக ஏற்றுக்கொண்டேன் என்று இல்லை. இரண்டு கொள்ளுப்பேரன்மார்கள் இணைந்து நடக்கும் யாத்திரை. இவர் நேருவின் கொள்ளுப்பேரன். நான் காந்தியின் கொள்ளுப்பேரன்.
எந்தவொரு நெருக்கடி நம் அரசிலமைப்புக்கு வந்தாலும் நான் தெருவில் வந்து நிற்பேன். எந்த கட்சி ஆள்கிறது என்பது பற்றி எனக்கு கவலையில்லை. நான் அதற்காகவே இங்கு வந்திருக்கிறேன். நான் முதலில் ஆங்கிலத்தில்தான் பேசுவதாக இருந்தேன், சகோதரர் கோரிக்கையால் தமிழில் பேசுகிறேன். நான் இங்கு வருவதற்கு முன்பு பல பேர் என்னிடம் சொன்னார்கள். நான் ஒரு கட்சியின் தலைவன், நீங்கள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டால் உங்கள் அரசியல் வாழ்க்கை பாதிக்கும் எனத் தெரிவித்தார்கள். ஆனால் எனது அரசியல் பயணம் மக்களுக்காக தொடங்கியது எனக்காக அல்ல என்று நான் கூறினேன்” எனப் பேசினார்.