இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நியமனம்.. மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியாவின் 51ஆவது தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இதுதொடர்பான அறிவிப்பை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான சஞ்சீவ் கன்னாவை நியமனம் செய்திருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தற்போது தலைமை நீதிபதியாக உள்ள டி. ஒய். சந்திரசூட், அடுத்த மாதம் 10ஆம் தேதியோடு ஓய்வு பெறுகிறார். இந்த சூழலில், உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான சஞ்சீவ் கன்னாவை தலைமை நீதிபதியாக பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு சந்திரசூட் கடிதம் அனுப்பினார்.
இந்த நிலையில், சந்திரசூட்டின் பரிந்துரையை ஏற்று புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அறிவிப்பு வெளியிட்ட மத்திய சட்டத்துறை அமைச்சர், "இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அதிகாரத்தைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவர், இந்தியத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகு, இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியான சஞ்சீவ் கன்னாவை இந்தியத் தலைமை நீதிபதியாக நியமினம் செய்திருக்கிறார். நவம்பர் 11ஆம் தேதி, இந்த நியமனம் அமலுக்கு வரும்" என குறிப்பிட்டுள்ளார்.
In exercise of the power conferred by the Constitution of India, Hon’ble President, after consultation with Hon’ble Chief Justice of India, is pleased to appoint Shri Justice Sanjiv Khanna, Judge of the Supreme Court of India as Chief Justice of India with effect from 11th…
— Arjun Ram Meghwal (@arjunrammeghwal) October 24, 2024
யார் இந்த சஞ்சீவ் கன்னா?
1960 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி பிறந்த நீதிபதி கன்னா, 1983 ஆம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து, தீஸ் ஹசாரி வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் பயிற்சி பெற்றார். டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயங்களிலும் வழக்கறிஞராக பணியாற்றியவர். அரசியலமைப்புச் சட்டம், நேரடி வரி விதிப்பு, நடுவர் மன்றம், வணிகச் சட்டம், நிறுவனச் சட்டம், நிலச் சட்டம், சுற்றுச்சூழல் சட்டம் என பல்வேறு துறைகளில் பயிற்சி எடுத்துள்ளார்.
நீதிபதி கண்ணா 2005 இல் டெல்லி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக உயர்த்தப்பட்டார் மற்றும் 2006 இல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக டெல்லி சர்வதேச நடுவர் மையம் உள்ளிட்டவைகளிலும் இடம்பெற்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.
ஜனவரி 18, 2019 அன்று, நீதிபதி கண்ணா நீதிபதி கன்னா டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்கு உயர்த்தப்பட்டார்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக, அவர் 17 ஜூன் 2023 முதல் 25 டிசம்பர் 2023 வரை உச்ச நீதிமன்ற சட்ட சேவைக் குழுவின் தலைவராக பதவி வகித்துள்ளார். அவர் தற்போது தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் நிர்வாகத் தலைவராகவும், போபாலில் உள்ள National Judicial Academy-ன் ஆளும் ஆலோசகரின் உறுப்பினராகவும் உள்ளார்.