Bullet Train in India: மணிக்கு 400 கி.மீ வேகம்.. 7 மணி நேரத்தில் டெல்லி TO சென்னை! E10 SHINKANSEN சிறப்பம்சங்கள்
E10 Shinkansen Bullet Train: ஜப்பானின் அடுத்த தலைமுறை புல்லட் ரயிலான E10 ஷின்கன்செனை அறிமுகப்படுத்த இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

E10 Shinkansen Bullet Train: ஜப்பானின் அடுத்த தலைமுறை புல்லட் ரயிலான E10 ஷின்கன்சென், அதிகபட்சமாக மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் புல்லட் ரயில் சேவை:
உலகின் மிகப்பெரிய ரெயில்வே நெட்வர்க்கை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இதில் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான நபர்கள் இதில் பயணித்து வருகின்றனர். அதிகளவில் பயன்படுத்தப்படும் பொதுப்போக்குவரத்து என்ற புகழைழையும் கொண்டிருக்கிறது. ஆனாலும், வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய ரயில்வேயின் வேகம் என்பது போட்டித்தன்மையை கொண்டிருக்கவில்லை. அந்த குறையை போக்கும் விதமாக தான், ஜப்பானின் ஷின்கன்சென் அதாவது புல்லட் ரயில் இந்தியாவில் கொண்டுவரப்பட உள்ளது. குறிப்பாக E10 எனப்படும் அடுத்த தலைமுறை புல்லட் ரயில் தான் இந்தியாவிற்கு வரவுள்ளதாகவும், இது நிலநடுக்கமே வந்தாலும் பாதிப்பை கண்டிராத திறனை கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேயின் வேகம்:
இந்தியாவில் வழக்கமாக இயங்கக் கூடிய ஒரு விரைவு ரயிலின் அதிகபட்ச வேகம் என்பது மணிக்கு சுமார் 90 முதல் 100 கிலோ மீட்டராக உள்ளது. நாட்டின் மிக வேகமான ரயிலாக கருதப்படும் வந்தே பாரத், அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. ஆனால், பல பிரிவுகளிலும் இந்த ரயில் 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலேயே இயக்கப்படுகிறது. சர்வதேச ரயில்வேயின் வேக தரத்துடன் ஒப்பிடுகையில், வந்தே பாரத்தின் வேகம் என்பது சொற்பமே. சீனாவின் வேகமான ரயிலான ஷாங்காய் மக்ளென் மணிக்கு 460 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்குகிறது. ஜப்பானின் அதிவேக ரயிலான ஷின்கன்சென் எனப்படும் புல்லட் ரயிலின் E5 எடிஷன் அதிகபட்சமாக மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. ஃப்ரான்சின் TGV மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. இதேபோன்று இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, தென்கொரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள, ரயில் சேவையின் வேகம் இந்தியாவை காட்டிலும் 2 முதல் 3 மடங்கு வரையில் அதிகமாக உள்ளது.
JR East announced the E10 series, the next-gen Tohoku Shinkansen, set to replace the E2/E5. Design is underway, with first units arriving after autumn 2027 and commercial operations starting in 2030.
— Japan Station (@JPNStation) March 4, 2025
Key Features of the E10 Series:
•Safety Enhancements: The E10 series… pic.twitter.com/tAzBdHhUBq
இந்தியாவில் E10 புல்லட் ரயில்:
சர்வதேச நாடுகளின் ரயில்வே சேவைக்கு நிகராக இந்திய நெட்வர்க்கை மேம்படுத்துவதற்காக, 2017ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது தான் ஜப்பானின் புல்லட் ரயில் சேவை அறிமுகம். இந்த திட்டத்திற்கான சாத்தியக்கூறுகளுக்கான ஆய்வுகள், பிரத்யேக இருப்பு பாதைகள் மூலம் மட்டுமே இயக்கப்படும் போன்ற காரணங்களால் திட்டம் தாமதமாகி வந்தது. இந்நிலையில், பிரதமர் மோடி மேற்கொண்ட ஜப்பான் பயணத்தின்போது, இருநாடுகளுக்கு இடையே புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, அடுத்த தலைமுறை புல்லட் ரயிலான E10 இந்தியாவிற்கு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிலேயே தற்போது E5 எடிஷன் புல்லட் ரயில் தான் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
E10 புல்லட் ரயிலின் அம்சங்கள்:
அதிகபட்சமாக மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றாலும், E10 ரயிலில் அதிர்வுகள் என்பதே இருக்காது என்பது ரயிலின் முக்கிய சிறப்பம்சமாக கருதப்படுகிறது. நிலநடுக்கமே வந்தாலும், இந்த ரயிலின் மீது பெரிய தாக்கம் ஏற்படாது என்பது இதன் மிக மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை உணர்த்துகிறது. வழக்கமான ரயில்கள் வேகமாக பயணிக்கும்போது, எதிர்பாராத விதமாக நிலநடுக்கம் ஏற்பட்டால், இருப்பு பாதைகள் அதிர்ந்து ரயில்கள் தடம்புரள வாய்ப்புள்ளது. ஆனால், இதில் வழங்கப்பட்டுள்ள கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் மூலம், புல்லட் ரயிலானது இருப்புப் பாதையுடன் மிகவும் இறுக்கமாக இணைக்கப்படும். இதனால் நிலநடுக்கமே வந்தாலும் தடம்புரள வாய்ப்பில்லை என ஜப்பான் உறுதி அளிக்கிறது.
இதன் மேம்படுத்தப்பட்ட ப்ரேக்கிங் சிஸ்டமும் கவனத்தை ஈர்க்கும் விதமாக உள்ளது. 320 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்தாலும், ப்ரேக் அடித்தால் அடுத்த 3.4 கிலோ மீட்டருக்குள் 0 வேகத்திற்கு வந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய எடிஷனை காட்டிலும் 15 சதவிகிதம் கூடுதல் திறன் வாய்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்தியா மாதிரியான அதிகப்படியான நிறுத்தங்களை கொண்ட நாடுகளுக்கு, இந்த ப்ரேக்கிங் சிஸ்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மணிக்கு 400 கிலோ மீட்டர் வேகம்
வெறும் 2+2 இருக்கை வசதிகளுடன் மிகவும் விசாலமான இடவசதியை கொண்டுள்ளது. இதனால் அதிகப்படியான லக்கேஜ்களை கூட எளிதாக எடுத்துச் செல்ல முடியும். வசதியை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள்து. இதுபோக, வீல்சேரில் வரக்கூடிய பயணிகளுக்கான சேவைகள், ஆற்றலை திறம்பட பயன்படுத்துவது ஆகிய அம்சங்களும் E10 புல்லட் ரயிலில் கவனத்தை ஈர்க்கின்றன. இந்த ரயிலை இயக்குவதற்கான பயிற்சியிலும் ஏற்கனவே இந்தியர்கள் ஜப்பானிற்கு சென்று ஈடுபட தொடங்கியுள்ளனர். புதிய எடிஷன் புல்லட் ரயிலை அதிகபட்சமாக 400 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க, ஜப்பான் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
எப்போது புல்லட் ரயில் பயன்பாட்டிற்கு வரும்?
2030ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இந்தியாவில் முதல் புல்லட் ரயில்சேவை பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகமதாபாத் - மும்பை இடையேயான 500 கிலோ மீட்டர் தூர வழித்தடத்தில் முதலில் இந்த சேவை பயன்பாட்டிற்கு வர உள்ளது. இந்த தூரத்தை E10 புல்லட் ரயில் 320கிமீ வேகத்தில் சென்றாலே, வெறும் 2 மணி நேரத்தில் கடக்கும் திறன் கொண்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டால், வெறும் 7 மணி நேரத்திலேயே சென்னையில் இருந்து டெல்லியை அடைய முடியும் என வல்லுநர்கள் கணக்கிட்டுள்ளனர்.





















