காஷ்மீரில் நாளை ராகுல்காந்தி நடைபயணம்.. இன்று ஜம்முவில் இரட்டை குண்டுவெடிப்பு.. நீடிக்கிறது உச்சகட்ட பதற்றம்
நேற்று, ஜம்மு காஷ்மீரை அடைந்த இந்திய ஒற்றுமை நடைபயணம் வரும் 30ஆம் தேதியோடு நிறைவடைகிறது.
ஜம்முவில் இன்று காலை இரட்டை வெடிகுண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இதில் சிக்கி ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். இந்திய ஒற்றுமை நடைபயணம் ஜம்மு காஷ்மீரை நெருங்க உள்ள நிலையில், ராகுல் காந்தியின் பாதுகாப்பு குறித்து பாதுகாப்பு முகமைகள் கவலை தெரிவித்திருந்தன.
ராகுல் நடைபயணம் தற்காலிக நிறுத்தம்:
இதற்கு மத்தியில் நடந்த இந்த வெடிகுண்டு தாக்குதல் உச்சக்கட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்முவில் உள்ள நார்வால் பகுதி தொழில் நகரமாக உள்ளது. ராகுல் காந்தி நடைபயணத்திற்காக ஜம்மு காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில், இந்த அசம்பாவிதம் அரங்கேறியுள்ளது.
தற்போது, சத்வால் பகுதியில் ராகுல் காந்தி நடைபயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஜம்முவில் இருந்து 60 கிமீ தொலைவில்தான் சத்வால் பகுதி அமைந்துள்ளது. இந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதல் எப்படி நடந்தது என்பது குறித்து தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரட்டை குண்டுவெடிப்பு:
விபத்து நடந்த பகுதிக்கு தடயவியல் நிபுணர்கள் விரைந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வெடிகுண்டு தாக்குதல் குறித்து பேசியுள்ள கூடுதல் காவல்துறை இயக்குநர் (ஜம்மு) முகேஷ் சிங், "இந்த இரட்டை குண்டுவெடிப்பில் 6 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேடுதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
50 ஆயிரம் நிதி:
ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இதில், பலத்தரப்பட்ட மக்களிடம் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார் ராகுல் காந்தி. தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நடைபயணம் கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா, டெல்லி, ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து காஷ்மீரை சென்றந்துள்ளது.
நேற்று, ஜம்மு காஷ்மீரை அடைந்த நடைபயணம் வரும் 30ஆம் தேதியோடு நிறைவடைகிறது. இன்று நடைபயணத்தில் பங்கேற்றவர்களுக்கு ஓய்வு எடுக்கும் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபயணம் நாளை மீண்டும் தொடங்கப்பட உள்ளது.
ராகுல்காந்திக்கு எச்சரிக்கை:
காஷ்மீரில் நடைபயணத்தின்போது சில பாதை வழியாக செல்ல வேண்டாம் என ராகுல் காந்திக்கு பாதுகாப்பு முகமைகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருநர் கூறுகையில், "அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் வரிவான திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
சில பாதை வழியாக கால் நடையாகப் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அதற்குப் பதிலாக காரில் பயணம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரவு எங்கு தங்குவது உள்ளிட்ட விவரங்கள் பற்றி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராகுல் காந்தி ஸ்ரீநகரில் பயணிக்கும் போது அவருடன் குறிப்பிட்ட சிலரே பயணிக்க வேண்டும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் விரும்புகின்றனர்.
சில பாதைகள் பதற்றமான ஒன்றாக இருப்பதால் நடைபயணத்தின்போது யார் எல்லாம் அவர் அருகில் இருக்க வேண்டும் என அடையாளம் காணுமாறு அவரது குழுவினருக்கு அறிவுறுத்தியுள்ளோம்" என்றார்.