Jaishankar to Explain: இந்தியர்களுக்கு கைவிலங்கு.. மாநிலங்களவையில் விளக்கமளிக்கும் ஜெய்சங்கர்...
அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களுக்கு கைவிலங்கு பூட்டப்பட்ட விவகாரம் சர்சையாக வெடித்துள்ள நிலையில், இன்று மாநிலங்களவையில், வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கமளிக்கிறார்.

இந்தியர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற உடன் பிறப்பித்த அதிரடி உத்தரவுகளில் ஒன்று, அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை உடனடியாக நாடு கடத்துவது. இந்த உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட்ட நிலையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவர்கள் கணக்கெடுப்பப்பட்டு, அவர்களை அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பும் பணியை அமெரிக்கா தொடங்கியுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக 205 இந்தியர்களுடன் முதல் விமானம் இந்தியாவின் அமிர்தசரஸிற்கு வந்தடைந்தது.
கை, கால்களில் விலங்கு பூட்டப்பட்டதால் சர்ச்சை
அமெரிக்காவிலிருந்து இந்தியர்களை திருப்பி அனுப்பும்போது, அவர்களது கை மற்றும் கால்களில் விலங்குகள் பூட்டப்பட்டிருந்தது, அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் வெளியிட்ட வீடியோவிலிருந்து தெரியவந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. மேலும், அனைவருக்கும் ஒரே கழிவறைதான் ஒதுக்கப்பட்டதாகவும், தாங்கள் கைதிகள் போலவே கையாளப்பட்டதாகவும், நாடு திரும்பியவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது, இந்தியர்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் இந்தியாவிற்கு அவமானம் என்றும் பதிவுகள் இடப்பட்டு வருகிறது.
நாடாளுமன்றத்தில் எதிரொலித்த கைவிலங்கு பிரச்னை
இந்த நிலையில், இந்தியர்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்டு அனுப்பப்பட்ட சம்பவம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. அமெரிக்காவிலிருந்து இந்தியர்களை அழைத்துவர மத்திய அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றும், அமெரிக்க அரசால் இந்தியர்கள் சரியாக கையாளப்படவில்லை என்றும் கூறி, எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையில் பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டதால் அவை நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.
வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
இப்படிப்பட்ட சூழலில், இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாநிலங்களவையில் விளக்கமளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகலில் அவை கூடியதும், 2 மணி அளவில், அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் அனுப்பப்பட்ட விதம், அதற்கான நடவடிக்கைகள் குறித்து, ஜெய்சங்கர் விளக்கமளிக்க உள்ளார்.
முன்னதாக, பிரதமர் மோடியை சந்தித்த வெளியுறவுத்துறை அமைச்சர், இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

