J-K Election, Phase 1: 10 ஆண்டுகள் ஓவர், ஜம்மு & காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் - முதற்கட்டமாக இன்று 24 தொகுதிகளில் வாக்குப்பதிவு
J-K Election, Phase 1: ஜம்மு காஷ்மீரில் பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, முதன்முறையாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
J-K Election, Phase 1: ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடைபெறும் நிலையில், இன்று முதற்கட்டமாக 24 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஜம்மு & காஷ்மீர் சட்டமன்ற தேர்தல்:
ஜம்மு & காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் முதற்கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் காஷ்மீர் மற்றும் ஜம்மு ஆகிய இரு பகுதிகளையும் உள்ளடக்கிய 90 தொகுதிகளில், 24 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 5.66 லட்சம் இளம் வாக்காளர்கள் உட்பட 23.27 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் இன்று வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் 24 தொகுதிகளில் 219 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆகஸ்ட் 2019ல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு, மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக மறுசீரமைக்கப்பட்டதை தொடர்ந்து, ஜம்மு & காஷ்மீரில் நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.
24 தொகுதிகளின் விவரங்கள்:
காஷ்மீர் பகுதியில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளும், ஜம்மு பிரிவில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதில் காஷ்மீர் பிரிவு தொகுதிகள் பாம்பூர், டிரால், புல்வாமா, ராஜ்போரா, ஜைனாபோரா, ஷோபியான், டிஎச் போரா, குல்காம், தேவ்சர், தூரு, கோகர்நாக் (எஸ்டி), அனந்த்நாக் மேற்கு, அனந்த்நாக், ஸ்ரீகுஃப்வாரா-பிஜ்பெஹாரா, ஷங்குஸ்-அனந்தநாக் கிழக்கு, மற்றும் பஹல்காம் ஆகியவை ஆகும். ஜம்மு பிரிவில் இந்தர்வால், கிஷ்த்வார், பேடர்-நாக்சேனி, பதர்வா, தோடா, தோடா மேற்கு, ரம்பன் மற்றும் பனிஹால் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
நட்சத்திர வேட்பாளர்கள்:
முதற்கட்ட தேர்தலில் 8 தொகுதிகளில் பாஜக தனது வேட்பாளர்களை நிறுத்தவில்லை. பிடிபியும் சில தொகுதிகளில் போட்டியிடவில்லை. தேசிய மாநாட்டு கட்சியும் (என்சி) காங்கிரஸும் கூட்டணியில் இருந்தாலும் நட்புரீதியான போட்டியில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் சஜ்ஜாத் கிட்ச்லூ (NC), காலித் நஜித் சுஹார்வர்டி (NC), விகார் ரசூல் வானி (காங்கிரஸ்), அப்துல் மஜித் வானி (DPAP), முஹம்மது யூசுப் தாரிகாமி (CPIM), மற்றும் சுனில் ஷர்மா (BJP) ஆகியோர் தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்களாக கருதப்படுகின்றனர். கூடுதலாக, மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த குலாம் முகமது சரூரி, டிபிஏபியால் டிக்கெட் மறுக்கப்பட்டதால் சுயேட்சையாக போட்டியிடுகிறார். தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் பானிஹால், பதேர்வா மற்றும் தோடா ஆகிய இடங்களில் நட்புரீதியிலான போட்டியில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன, அதே நேரத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சில கிளர்ச்சி வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
வாக்குச்சாவடி மையங்கள்:
தேர்தலில் வாக்களிக்கும் செயல்முறையை எளிதாக்கும் வகையில் மொத்தம் 3,276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர் பங்கேற்பை அதிகரிக்க வடிவமைக்கப்பட்ட சிறப்பு வாக்குச்சாவடி மையங்கள், அதாவது பெண்களுக்கான பிரத்யேகமான பிங்க் வாக்குச்சாவடி மையங்கள், PwD நபர்கள் இருக்கும் வாக்குச்சாவடி மையங்கள், இளைஞர்கள்-ஆளும் வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் பசுமை வாக்குச்சாவடி மையங்கள் போன்றவை இதில் அடங்கும்.
வாக்காளர் விவரங்கள்:
தகுதி பெற்ற 23.27 லட்சம் வாக்காளர்களில் 11.76 லட்சம் பேர் ஆண்கள், 11.51 லட்சம் பேர் பெண்கள், 60 பேர் மூன்றாம் பாலினத்தவர். 18 முதல் 19 வயதுடைய 1.23 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் உட்பட 18 முதல் 29 வயதுடைய இளைஞர் வாக்காளர்கள் எண்ணிக்கை 5.66 லட்சம். இந்தக் கட்டத்தில் 28,309 மாற்றுத்திறனாளிகள் (PwDs) மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட 15,774 வாக்காளர்கள் பங்கேற்பார்கள்.
வாக்குச்சாவடி மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில், துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர் கூடுதலாக களமிறக்கப்பட்டுள்ளனர்.