(Source: Poll of Polls)
NASA ISRO : நாசாவுடன் கை கோர்க்கும் இஸ்ரோ...சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இணைந்து செல்ல ஒப்பந்தம்..!
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அமெரிக்காவின் நாசாவும் இந்தியாவின் இஸ்ரோவும் இணைந்து செல்ல ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசு முறை பயணமாக பிரதமர் மோடி, அமெரிக்காவுக்கு சென்றுள்ள நிலையில், ஆர்டெமிஸ் உடன்படிக்கையில் இன்று இந்தியா இணைந்துள்ளது. வரும் 2024ஆம் ஆண்டுக்குள், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அமெரிக்காவின் நாசாவும் இந்தியாவின் இஸ்ரோவும் இணைந்து செல்ல ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாசாவுடன் கை கோர்க்கும் இஸ்ரோ:
ஆர்டெமிஸ் உடன்படிக்கை மூலம் விண்வெளி தொடர்பான ஆய்வை ஒத்த கருத்துடைய பல்வேறு நாடுகள் இணைந்து மேற்கொள்கின்றன. தற்போது, இதில் இந்தியா இணைந்திருப்பது குறித்து அமெரிக்க அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "மனிதகுலத்தின் நலனுக்காக விண்வெளி ஆய்வுக்கான பொதுவான பார்வையை முன்னெடுத்து செல்லும் ஆர்டெமிஸ் உடன்படிக்கையில் இந்தியா இணைய உள்ளது என்பதை அறிவிக்க உள்ளோம்" என்றார்.
கடந்த 1967ஆம் ஆண்டின் அவுடர் ஸ்பேஸ் உடன்படிக்கையின் (OST) அடிப்படையில், ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கைகள் 21 ஆம் நூற்றாண்டில் விண்வெளி ஆய்வு மற்றும் பயன்பாட்டிற்கு வழிகாட்ட வடிவமைக்கப்பட்ட கொள்கைகள் ஆகும். செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் விண்வெளி ஆய்வுகளை விரிவுபடுத்தும் இறுதி குறிக்கோளுடன், 2025 ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை சந்திரனுக்குத் திரும்ப அனுப்புவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
நாசாவும் இஸ்ரோவும் இந்த ஆண்டு மனித விண்வெளிப் பயண ஒத்துழைப்புக்கான வியூக விதிகளை உருவாக்கி வருகின்றன. கூடுதலாக, நாசா மற்றும் இஸ்ரோ 2024 ஆம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கூட்டாக பயணிக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம்:
அமெரிக்க சென்ற மோடி, வெள்ளை மாளிகையில் இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது குடும்பத்தினர் வழங்கிய விருந்தில் கலந்து கொண்டார். இதற்கு முன்னதாக, அமெரிக்கா வாழ் இந்தியர்களின் உற்சாக வரவேற்புக்காக நேற்று நியூயார்க்கில் இறங்கிய பிரதமர் மோடி, பின்னர் நோபல் பரிசு பெற்றவர்கள், கல்வியாளர்கள், தொழில்துறை தலைவர்கள், ஆசிரியர்கள், கணிதவியலாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் தொடர் சந்திப்புகளை நடத்தினார்.
அதன் பின்னர், எலன் மஸ்க்கை சந்தித்தார் பிரதமர் மோடி. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எலன் மஸ்க், “ பிரதமர் மோடி உண்மையிலேயே இந்தியாவிற்கு சரியான விஷயங்களைச் செய்ய விரும்புகிறார் என்று என்னால் சொல்ல முடியும். அவர் வெளிப்படையாக இருக்க விரும்புகிறார். புதிய நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறார். மேலும், அது இந்தியாவின் சாதகமாக இருப்பதை உறுதிசெய்ய விரும்புகிறார். அடுத்த ஆண்டு மீண்டும் இந்தியாவிற்கு வருகை தர, நான் திட்டமிட்டுள்ளேன்.
அதற்காகவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். ஸ்டார்லிங்கை இண்டர்நெட்டை இந்தியாவிற்கும் கொண்டு வர ஆவலுடன் காத்திருக்கிறோம். இதன்மூலம், இந்தியாவில் உள்ள தொலைதூர மற்றும் கிராமப்புற கிராமங்களுக்கு நம்பமுடியாத அளவிற்கு உதவியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் ” என தெரிவித்தார்.